கடற்படைக்கு வெள்ளையடிக்க வேண்டாம்!
அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடல்காவலர்கள் படை இலங்கை கடற்படையை புனிதமாக்கி தமிழக மீனவர்களையும் உள்ளுர் மீனவர்களையும் மோத வைக்கும் சதி முயற்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் டக்ளஸ் தேவானந்தா யதார்த்தத்தை புரிந்து தனது அமைச்சரவை பத்திரத்தை மீளப்பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரியுள்ளார்.
தமிழக அரசுடன் பேசி இந்திய மீனவர்களது அத்துமீறல்களை தடுக்க டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை எடுக்கமுடியுமெனவும் யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டக்ளஸின் முயற்சி தமிழக உறவுகளுடனான மோதல்களிற்கே வழிகோலுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுப்பதற்கான கடற்படையின் தற்போதைய முயற்சியை கண்காணித்து உதவுவதற்காகவே கடல் காவலர்கள் திட்டம் கொண்டு வரப்படுவதாக டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார்.
வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊடாக தன்னார்வப் படையில் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment