கச்சதீவு வரமாட்டோம்:இந்திய மீனவர்கள்!
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அண்மையில் காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 23 இந்திய மீனவர்களை கைது செய்ததோடு, 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள், நேற்றைய தினம் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 20 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ஒருவர் 2ஆவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
இலங்கை நீதிமன்ற தீர்ப்பு இராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று(17) மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை -இந்தியா இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு தேவாலய திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்
Post a Comment