தமிழக கடற்தொழிலாளருக்கு சிறை -படகும் பறிமுதல் ; 18 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , 18 பேருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட கால பகுதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 07ஆம் திகதி 19 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன. 

கைதான கடற்தொழிலாளர்கள் மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 19 தமிழக கடற்தொழிலாளர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 

அவர்களில் ஒருவர் படகு உரிமையாளராகவும் , ஓட்டியாகவும் இருந்தமையால் , அவரின் படகினை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க மன்று உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

மற்றைய படகின் உரிமையாளர் இல்லாதமையால் , படகின் ஓட்டிக்கு மூன்று குற்ற சாட்டுக்களுக்கும் தலா 06 மாத காலமாக 18 மாத சிறைத்தண்டனை விதித்த மன்று , அதனை ஏக காலத்தில் அனுபவிக்கும் விதமாக 06 மாத சிறைத்தண்டனை விதித்தது. 

மற்றையவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து ,அதனை ஐந்து வருட காலத்திற்கு மன்று ஒத்தி வைத்துள்ளது. 

அதேவேளை கடந்த 16ஆம் திகதி தமிழக கடற்தொழிலாளர்கள் மூவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்த நிலையில் ,குறித்த மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கடற்தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் , கச்ச தீவு திருவிழாவையம் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் ஒரு தமிழக கடற்தொழிலாளருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments