தேர்தல்களை இலக்கு வைக்கும் கருத்துச் சுதந்திர மரண மணி! பனங்காட்டான்


1973 இல் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அரசுடமையாக்கிய சிறிமாவோ அரசு 1974ல் "சன்" பத்திரிகை நிறுவனத்தை சீல் வைத்து மூடி ஊடக சுதந்திரத்தை நசுக்கியது. அவ்வேளை அரச பத்திரிகையான டெய்லி நியூசில் "ஜனநாயகம் அகால மரணம்" என ஆங்கிலத்தில் நுட்பமாக வரையப்பட்ட மரண அறிவித்தல் விளம்பரமாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது பின்வருமாறு அமைந்திருந்தது. "The death occured under tragic circumstances of D.E.M.O' Cracy, beloved husband of T.Ruth, loving father of L.I.Bertie, Faith and Justica. Interred on Saturday 20th instant. Araliya Medora, Panagiyawatte."

ரணில் தலைமையிலான இன்றைய "கலப்பு" ஆட்சிபீடம் மிகமிக அவசரப்பட்டு, கடுமையான பிரயத்தனத்தின் பின்னர் இணையவழி (நிகழ்நிலை) பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 

இதன் வழியாக தெரியவரும் பிரதான அம்சம், விரைவில் அடுத்தடுத்து பல தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அடுத்த மாத சுதந்திர தின நிகழ்வையடுத்து அதிகாரபூர்வமாக தமது தேர்தல் போட்டியை ரணில் அறிவிப்பாரென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை கருத்துச் சுதந்திரத்துக்கான மரண மணி என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடக நிறுவனங்கள் மற்றும் நாற்பதுக்கும் மேற்பட்ட மனுதாரர்கள் கடந்த வருடமே உயர்நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இந்த மசோதா, இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. தவறான அறிக்கை என்று கருதும் எந்தவொரு இடுகையையும் 24 மணி நேரத்துக்குள் அகற்ற ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை இந்த மசோதா அனுமதிக்கிறது. இந்த மசோதாவினால் கூகிள், பேஸ்புக், ருவிற்றர், இன்ஸ்ராகிராம், வட்ஸ்அப், கூகிள் தேடல், கூகுள் வரைபடம், ஜிமெயில் போன்ற அத்தியாவசிய சேவைகளை இலங்கை இழக்கக்கூடுமென இந்த அமைப்புகள் தெரிவித்திருந்தன. 

இவை எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டன. அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி விவாதத்துக்காக கடந்த வாரம் இது நாடாளுமன்றத்துக்கு வந்தது. நாடாளுமன்ற அமர்வை கடந்த 27ம் திகதி ஒத்திவைப்பதற்கு முன்னர் எப்பாடுபட்டாவது இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென ஆட்சித்தரப்பு துடித்தது. இதனை நிறுத்துவதற்கான பகீரத முயற்சிகளை வாக்குவாதங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டனர். தங்கள் தரப்பிலுள்ள பெரும்பான்மையால் எதனையும் சாதிக்க சாதிக்க முடியும் என நம்பும் ஆட்சித்தரப்பு இந்த மசோதா மீது விவாதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தக் கோரியது. 

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டத்திலுள்ள 57 திருத்தங்களில் 34ஐ உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்ததை ஒட்டிய துறைசார் மேற்பார்வைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்காமல் விவாதம் இடம்பெறக்கூடாதென எதிர்த்தரப்புகள் வாதாடின. இதன் மீதான வாக்கெடுப்பில் அரச தரப்புக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததால் 23ம் 24ம் திகதிகளில் விவாதம் இடம்பெற்றது. 

இரண்டு நாள் விவாத முடிவில் ஆதரவாக 108 நாட்களும், எதிராக 62 வாக்குகளும் கிடைத்ததால் 47 மேலதிக வாக்குகளால் சட்டம் நிறைவேறியது. 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்குபற்றாததையும் இங்கு பதிவிட வேண்டும். அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அரச தரப்பு எம்.பியாக இருக்கும் றொசான் ரணசிங்க மசோதாவுக்கு எதிராக வாக்களித்தாராயினும் இவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க இல்லையென்பதையும் குறிப்பிட வேண்டும். 

மக்களின் உரையாடல்களை உளவு பார்க்க அனுமதிப்பதில் கட்டமைக்கப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாததை பலரும் விவாதத்தில் சுட்டிக்காட்டினர். எனினும் மாற்றமேதும் இன்றியே மசோதா சட்டமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்தில் தொழிற்படும் இணையவழி ஊடகங்களை, அவை வெளியிடும் கருத்துகளை, பொதுமக்களும் அமைப்புகளும் அவற்றினூடாகத் தெரிவிக்கும் அபிப்பிராயங்களை நசுக்குவதே இச்சட்டத்தின் அடிப்படை என்று எதிர்தரப்பினர் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறினர். 

கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளில் முக்கியமானது. ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் டெமோக்கிரஸி என்று கூறிவந்தாலும், இது கிரேக்க மொழியின் பதம். டெமோ என்பது மக்கள் எனவும், கிரெற்றோல் என்பது சக்தி எனவும் குறிப்பிடப்படுவது. ஆக டெமோக்கிரஸி என்பது மக்கள் சக்தி என்று அர்த்தம் கொண்டது. 

அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஏப்ரகாம் லிங்கன் ஜனநாயகம் பற்றிக் குறிப்பிடுகையில், The democracy is - of the people, by the people, for the people என்று விபரித்துள்ளார். மொத்தத்தில் மக்களால் மக்களுக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஜனநாயகம் என்பது ஆட்சிபீடத்தில் இருப்பவர்கள் தங்களிடமுள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதனை நசுக்குவதாக மாற்றமடைந்துள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 'கலப்பு ஜனநாயக அரசு' கருத்துச் சுதந்திரத்தை (இதனை ஊடக சுதந்திரம் என்று சொல்வர்) எவ்வாறு அழித்தொழிக்க முயற்சிக்கின்றது என்பதைப் பார்க்கையில், 1964ம் ஆண்டில் அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அரசுடமையாக்க எடுத்த முயற்சிகள் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை நினைவுக்குட்படுத்துவது தவிர்க்க முடியாதுள்ளது. 

லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் ரணில் விக்கிரமசிங்கவின் பாட்டனார்  (தாயாரின் தகப்பன்) டி.ஆர்.விஜேவர்த்தனவால் உருவாக்கப்பட்டது. அவரது மரணத்தின் பின்னர் தாய்மாமனார் றஞ்சித் விஜேவர்த்தன இதனை பொறுப்பேற்று நடத்தி வந்தார். ரணிலின் தாயார் நளினி விக்கிரமசிங்க லேக்ஹவுஸின் பணிப்பாளர்களில் ஒருவர். ரணிலின் தந்தையாரான எஸ்;மன்ட் விக்கிரமசிங்க லேக்ஹவுஸின் மூளையாக இயங்கி வந்தவர். இவ்வேளையிலேயே லேக்ஹவுஸை அரசுடமையாக்க சிறிமாவோ நடவடிக்கை எடுத்திருந்தார். 

1964ல் இந்நிறுவனத்தை அரசுடமையாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாயினும் அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. புதிய அமர்வு ஆரம்பிப்பதற்கிடையில் சிறிமாவோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை ரணிலின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்கவும், பெரிய தந்தையார் முறையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் மிக ரகசியமாக மேற்கொண்டனர். புதிய அமர்வின் சிம்மாசனப்பிரசங்க வாக்கெடுப்பின் போது இது நிகழ்ந்தது. சிறீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவரான அமைச்சர் சி.பி.டி.சில்வா ஆட்சித்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்குச் சென்று ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து கொண்டார். பிரதிச் சபாநாயகர் டி.ஏ.ராஜபக்ச (மகிந்தவின் தந்தை) தலைமையில் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது இந்தக் கட்சித்தாவல் இடம்பெற்றது. சி.பி.டி.சில்வாவைத் தொடர்ந்து மற்றும் சில சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் ஐக்கிய தேசிய கட்சிப் பக்கம் பாய்ந்தனர். சிம்மாசனப்பிரசங்க வாக்கெடுப்பில் சிறிமாவோ ஆட்சி ஒரு வாக்குக் குறைவினால் கவிழ்க்கப்பட்டது. 

தமது தந்தையும், பெரிய தந்தையும் 1964ல் ஊடக சுதந்திரத்தைக் காப்பாற்ற கையாண்ட முறைமைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ரணில் ஈடுபட்டிருப்பதை இணையவழி பாதுகாப்பு என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எடுத்துக்காட்டுகிறது. 

1970ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ தம்மோடு இணைந்திருந்த இடதுசாரிகளின் ஆதரவுடன் 1973ல் லேக்ஹவுஸை அரசுடமையாக்கும் முயற்சியில் வெற்றி கண்டார். மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவருக்கிருந்ததால் இது சுலபமாகியது. 

1970ம் ஆண்டுத் தேர்தலில் தமக்கு ஆதரவாக செயற்பட்ட சன் குழுமம் பத்திரிகை நிறுவனத்தை அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி சிறிமாவோ அரசு 1974ம் ஆண்டில் சீல் வைத்தது. இதன் பிரதிபலிப்பாக  அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆங்கில வெளியீடான டெய்லி நியூஸ் பத்திரிகையில் மரண அறிவித்தல் ஒன்று விளம்பரமாக வெளியாகி நாடு கடந்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

D.E.M.O Cracy    அகால மரணமானார் என்பது இந்த அறிவித்தல். ஆங்கிலப் பெயர் டெமோகிரஸி (ஜனநாயகம்) என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வகையில், நான்கு முதல் எழுத்துகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு இந்த மரண அறிவித்தல் வரையப்பட்டிருந்தது. ஊடக சுதந்திரம் அழிக்கப்பட்டது என்பதை ஜனநாயகம் அகால மரணமானது என்ற வகையில் வெகு நுட்பமாக இது வரையப்பட்டு, அரசுடமையாக்கிய பத்திரிகையிலேயே பணம் செலுத்தி பிரசுரிக்கும் துணிச்சல் அன்று எவரோ ஒருவருக்கு இருந்துள்ளது. 

இந்த மரண அறிவித்தல் டெய்லி நியூஸ் பத்திரிகையில் 1974 ஏப்ரல் 24ம் திகதி பின்வருமாறு வரையப்பட்டிருந்தது: 

'The death occured under tragic circumstances of D.E.M.O' Cracy, beloved husband of T.Ruth, loving father of L.I.Bertie, Faith and Justica. Interred on Saturday 20th instant. Araliya Medora, Panagiyawatte."

இதன் தமிழாக்கம் பின்வருமாறு: உண்மையின் கணவரும், சுதந்திரம், நம்பிக்கை, நீதி ஆகியோரின் அன்புத்தந்தையுமான ஜனநாயகம் அகால மரணமடைந்தார். நல்லடக்கம் இருபதாம் திகதி புத்திசாலிப்பெண் பூந்தோட்டத்தில் இடம்பெற்றது. 

இந்த அகால மரண அறிவித்தல் யாரால் வரையப்பட்டிருக்கும் என்ற கேள்வி பல வருடங்களாக பேசப்பட்டு வந்தது. இதனை வரைந்தவரான மருத்துவர் (டாக்டர்) றிலி பெர்னான்டோ (Dr. Riley Fernando) கடந்த வருடம் யூன் மாதம் 15ம் திகதி முதுமை காரணமாக இயற்கை எய்தினார். 

ஊடக சுதந்திரம் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் நோக்குடன் மிகவும் சாதுரியமாக தமது பேனாவைப் பயன்படுத்திய இவர் இலங்கையின் ஊடக வரலாற்றில் பெயர் பொறிக்கப்பட வேண்டியவர். 

ஊடக சாம்ராஜ்யத்தின் (லேக்ஹவுஸ்) வழித்தோன்றலான ரணில் விக்கிரமசிங்க கருத்துச் சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கும் இன்றைய நாட்களில், அறகலய போராட்டம் நடத்தி கோதபாயவை நாட்டைவிட்டு ஓடவைத்தவர்களில் ஒருவர்கூட டாக்டர் றிலி பெர்னான்டோ போன்று இல்லையா என்று கேட்க வேண்டியுள்ளது. 

No comments