பொன்னாவெளி:மிரட்டி பணிய வைக்க முயற்சி
கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்கள் ஒன்றியத்தின் தலைவரின் வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (09) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
பூநகரி ஜெயபுரம் காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன்; சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும் சோதனைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
பொன்னாவெளியில் முருகைக்கற்களை அகழ இலங்கை அரசு டோக்கியோ சீமெந்து எனும் யப்பானிய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் அதற்கெதிராக பொன்னாவெளி,வேரவில் மற்றும் வலைப்பாடு உள்ளிட்ட ஜந்து கிராமங்களை சேர்ந்த அப்பகுதி மக்கள் அனைத்து மக்கள் ஒன்றியம் எனும் பேரில் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்
இந்நிலையில் போராட்டக்குழுவின் தலைவரான வல்லிபுரம் பாஸ்கரன் வீட்டிலேயே சோதனை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக நடைபெறுகின்ற போராட்டத்தினை இலக்காக கொண்டு போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் இச்சோதனை நடவடிக்கை இடம் பெற்றிருக்கலாம் என வல்லிபுரம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சீமெந்து தொழிற்சாலையை பொன்னாவெளியில் அமைப்பது தொடர்பில் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment