விளக்கமறியல் நீடிப்பு:நீதிகோரி முல்லையில் போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான காவல்துறையினரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று(08) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே நீதியை நிலைநாட்டாமல் ஜனாதிபதி சிரித்து கொண்டு புகைப்படம் எடுப்பதற்காகவே யாழ்ப்பாணம், வன்னிக்கு வருகிறார்; என்றால் நாட்டை எவ்வாறு நடத்துகிறார் என யோசிக்க வேண்டியிருப்பதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து வெளியிட்ட அவர் தீர்வுகளை வழங்கி விட்டு இங்கு வந்து புகைப்படங்களை எடுங்கள்.ஜெனிற்றா கைதில் காவல்துறையினர் மேலிடத்து உத்தரவால் அடக்கு முறையாக செயற்பட்டுள்ளனர் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வவுனியாவில் இலங்கை காவல்துறையினால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் வெள்ளிக்கிழமை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 05ம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் தலைவி உட்பட இருவர்; கைது செய்யப்பட்டனர். இன்றைய தினம் (08) வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்க தலைவிக்கு வெள்ளிக்கிழமை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment