பாதாள உலகில் வடகிழக்கு வாகனங்கள்!



வடகிழக்கில் அரச படைகள் மற்றும் துணை ஆயுதக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை தென்னிலங்கை பாதாள உலக நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தப்படுவது மீண்டும் உறுதியாகியுள்ளது.

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலியில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு காலி நீதிமன்றத்தால் புதன்கிழமை அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த  ஒருவரின் மோட்டார் சைக்கிள் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட நிலையில் அது படையினரின் பிடியில் இருந்து காணாமல் போயிருந்தது.

அவ்வாறு போர்க் காலத்தில் பறிபோன மோட்டார் சைக்கிளை, உரிமையாளர்  நீண்ட காலம் தேடியும் கிடைக்கவில்லையென கூறப்படுகின்றது.

இந்நிலையில் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளதால் உரிமையாளரை நாளை வெள்ளிக்கிழமை  (08)  ஆஜராகுமாறு காலி நீதிமன்றம், மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஏற்கனவே இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகளை தென்னிலங்கை பாதாள உலக கும்பல்கள் கூலிக்கொலைகளிற்கு பயன்படுத்துவதும் அண்மையில் அம்பலமாகியுள்ளது. 


No comments