மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் - மஹிந்த


அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப வலுவான அரசாங்கத்தை அமைப்போம் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று உறுதியளித்துள்ளது.

கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு நேற்று பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஆதரவாளர்களிடம் உரையாற்றிய 78 வயதுடைய மஹிந்த ராஜபக்ஷ, பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் கட்சி வலுவாக இருப்பதாகவும், நாட்டின் பலமான அரசியல் சக்தியாக தொடர்ந்தும் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு மக்களின் குரலை எதிரொலிக்கும் ஒரு வலுவான கட்சியின் அவசியத்தை வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் சவால்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என குறிப்பிட்டார்.

யுத்த வெற்றி மற்றும் கொரோனா தொற்றுநோயை திறம்பட நிர்வகித்தமை உட்பட, தனது குடும்ப ஆட்சியின் போது நடந்த வளர்ச்சிகள் குறித்தும் ஆதரவாளர்களுக்கு மஹிந்த ராஜபக்ச நினைவூட்டினார்.

No comments