நினைவிடத்தில் ஒருநாள் ஒன்றுகூடி அழுவதற்கும் உரிமையில்லையா? என்ன நியாயமோ? என்ன சட்டமோ? பனங்காட்டான்


இலங்கை ஒரு நாடு, இங்கு ஒரு சட்டமே என்று நித்தம் நித்தம் போதனை செய்யும் புத்தரின் வம்சத்தினர் இழப்புகளை நினைத்து வருடத்தில் ஒருநாள் உறவுகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் உரிமைகளைக்கூட மறுத்து வருகின்றனர். இந்த நாட்டில் என்ன நியாயமோ, என்ன சட்டமோ?

ஈழத்தமிழரின் ஆகப்பிந்திய உரிமைப் போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம். 

1970களின் பிற்பகுதியில் வெளியுலகத்துக்குத் தெரியவந்த தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் - ஆயுதங்களை ஆயுதங்களே சந்திக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தால் உருவானது. இதனை, சில வரலாற்றுப் பதிவாளர்கள் ஷஅரச பயங்கரவாதம் எதிர் தமிழ்ப் பயங்கரவாதம்| என்று குறிப்பிடுவர். 

பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு, வாழிட உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டு.... இவ்வாறு எல்லாமே 'பட்டுப்போன' இனம், இறுதியில் தனது இழந்த மண்ணை மீட்கவும், இருப்பதைக் காக்கவும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 

இந்த வரலாற்றுப் பாதையில் தம்மை ஆகுதியாக்கியவர்களை வணங்கவும், விளக்கேற்றித் துதிக்கவுமென ஒரு மாதம் வேண்டப்பட்டது. அதுவே கார்த்திகை மாதமானது. ஆயுதமேந்திய சமரில் முதற்பலியான இளைஞனின் நினைவு நாள் - நவம்பர் 27 மாவீரர் நாள். 

கார்த்திகை மாதம் என்பது மண்சுமந்த மேனியருக்கான மாதமாகி பூசிக்கப்பட்டு வருகிறது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் தமிழ்மண் சிக்கியிருந்த வேளையில், உக்கிரமான போர் நடந்து கொண்டிருந்த வேளையில், ஆயிரமாயிரம் மக்கள் சொந்த வீடு வாசலை இழந்து இடம்பெயர்ந்திருந்த காலத்தில் - 1989 நவம்பர் 27ம் திகதி அடர்ந்த வன்னிக்காட்டில் முதலாவது மாவீரர் நாள் பிரகடனமாக்கப்பட்டு அதற்கான உரை நிகழ்த்தப்பட்டது. 

அன்றிலிருந்து 2008ம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பெயர் குறிப்பிடப்படாத இடத்திலிருந்து மாவீரர் உரையை ஒரு மரபாக நிகழ்த்தி வந்தார். போராட்ட இயக்கத்தின் கொள்கைப் பிரகடன வடிவிலான இந்த உரையை சிங்கள தேசம் மட்டுமன்றி, சர்வதேச நாடுகளும் மிக உன்னிப்பாக செவிமடுத்து வந்தன என்பது வரலாற்றுப் பதிவு. 

போரில் உயிர்க் கொடையாளிகளான மண்மீட்பர்களின் நினைவுக்காக அந்தந்த பிரதேசங்களில் நடுகற்கள் நாட்டப்பட்டு, மாவீரர் துயிலும் இல்லங்கள் உருவாக்கப்பட்டு அப்பிரதேசங்கள் புனித இடங்களாக மக்களால் மதிக்கப்பட்டு வந்தது. உலக மகாயுத்தங்களில் உயிர் துறந்த வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதைக்கு நிகரானதாக இவர்களுக்கான மதிப்பளிப்பு அமைந்தது. 

மாவீரர்களை அனுஷ்டிப்பதற்கான கார்த்திகை மாதத்தை 'அழல்சேல் குட்டம்' என்று சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. அழல் என்பது எரிதல் என்ற பொருள் கொண்டது. இறைவனை நெருப்பு வடிவில் உருவாகக் கண்டு வணங்குதல் தமிழர் மரபு. பஞ்சபூதங்களில் ஒன்றாக நின்று உலகை இயக்குவது அக்கினி. இதன் இயக்கத்தில் மனிதகுலம் இயங்குவதைக் காட்டுவது கார்த்திகை மாதமென அடையாளப்படுத்தப்படுகிறது. 

நடுகல் என்பது நினைவைப் போற்றுவதற்கான முதன்மை வார்த்தை. மண்ணுக்காகக் களமாடி விதையானவர்களை நடுகல்லாக்கினார்கள் என்பது இலக்கிய வழி. 

இறைவழி வழிபாட்டின் முழுமை தோன்றுவதற்கு முன்னரே, வீரவழிபாட்டில் நிறைவுற்றிருந்தோர் தமிழர். கடவுளை உணர்ந்து கொள்வதற்கு முன்பாக, கண்முன் வாழ்ந்த பெருவீரரை வழிபட்ட உயர் மரபு தமிழருக்குரியது. 

தமிழர் வரலாற்றில் பகையற்ற காலத்தைவிட பகையுற்ற காலமே அதிகம். இதனால் மண்ணையும் மக்களையும் காக்கும் பொறுப்பு காலமெல்லாம் காவலருக்கு இருந்தது. போரற்ற வாழ்வுக்காக நாளெல்லாம் போராட வேண்டியிருந்தது. கருவிலேயே உறுதி ஓதப்பட்டது. தாயின் பாலொடு தீரமும் ஊட்டப்பட்டது. சோறும் வீரமும் கலந்ததே உணவாயிற்று. 

வீரத்தை விளைவித்து, புண்பட்டு மண்தொட்ட மனிதரை இறைக்கு ஒப்பாக போற்றி வந்தவர்கள் தமிழர்கள். கடுமான் என்ற வீரனொருவன் மண் காக்கும் போரில் தன்னை ஈந்தான். அவனுக்காக தங்கள் இதயத்தை ஈரமாக்கிய மக்கள் ஊரின் புறத்தே அமைந்த திடலில் அவன் வீரத்தின் நினைவாக ஒரு கல் நட்டனர். பனை நாரில் தொடுக்கப்பட்ட வேங்கை மலர்களை அதற்கு மாலையாகச் சூட்டி கடுமானை நடுகல்லாக வழிபட்டனர். 

'ஊர்நனி யிறந்த பார்முதிர் புறந்தலை

ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்

போந்தையந் தோட்டில் புனைந்தனர் தொடுத்துப்

பல்லான் கோவலர் படலை சூட்டக் 

கல்லா யினையே கடுமான் தோன்றல்" 

என்று கூறுகிறது புறநானூறு. 

இவ்வாறு நடப்பட்ட கற்களில் வீரனின் பெயரும் அவன் பெருமைகளும் எழுதப்பட்டன. அக்கற்கள் மயில் இறகுகளாலும் மலர்களாலும் அழகுபடுத்தப்பட்டன. 

'பெயரும் பீடும் எழுதி அகர்தொறும் 

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" 

என்று கூறுகிறது அகநானூறு. 

பட்டினப்பாலை, 'கிடுகு நிரைத்து எஃகூன்றி அரண் போன்ற...." என்று சொல்கிறது. அற்றைத் தமிழர் மண்ணுக்காகத் தமை ஈந்த பெருவீரரைத் தமது தெய்வங்களாகவே கருதினர். அவர்களுக்கான நடுகற்களை நாள்தோறும் வழிபட்டனர். இசைக்கருவிகள் முழங்க படையலிட்டு அவர்களைப் போற்றினர்.

'..... பெயர் மருங்கறியார், கல்லெறிந்து எழுதிய நல்லாரை, மாராஅத்த கடவுள்" என மலைபடுகடாம் விபரிக்கிறது. மறக்குடி பிறந்த மக்கள் தம் பெருவீரர்களை வணங்குவதின்றிப் பிற தெய்வங்களை ஒருபோதும் வணங்க மாட்டார்கள். 

'கல்லே பரவி னல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே'

என்று கூறுகிறது புறநானூறு. 

மிக உயர்வான நடுகல் வழிபாடானது தமிழருக்குரித்தான வீரமரபின் உயர் சான்று. தமிழரால் போற்றப்படுகின்ற முருகன், ஐயனார், மதுரைவீரன், இருளன், சாம்பான் போன்ற தெய்வங்கள் நடுகல் வழிபாட்டிலிருந்தே உருவானவையென இலக்கியங்கள் கூறுகின்றன. 

சிங்கள தேசத்தின் அகோர செயற்பாடுகள் மாண்புற்ற தமிழர் வீரத்தை, அவர்களின் தீரத்தை, அவர்தம் ஈகத்தை மங்கச் செய்து மறைத்துவிட வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டே மாவீரர் துயிலும் இல்லங்களை அடித்து நொருக்கி அழித்தனர். நடுகற்களை உடைத்து தூள்தூளாக்கி மண்ணுடன் மண்ணாக்கினர். அவர்களின் புனிதத்தை மதிக்காது அந்த நிலத்தில் படைத்துறை முகாம்களை அமைத்து அராஜகம் புரிகின்றனர். 

வருடம் ஒரு தடவை அவ்விடத்தில் ஒன்றுகூடி நினைத்து துதித்து - அழுது கண்ணீர் மல்கும் உரிமையைக்கூட சிங்கள தேசம் மறுத்து வருகிறது. மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வாறு போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும், அங்கே துயில் கொள்பவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை புதுவையின் வரிகள் பின்வருமாறு கூறுகின்றன:

'ஓவென்றிரையும் ஊதற்காற்றே

வேகம் குறைத்து வீசு!

தூக்கம் கலைத்துத் தொலைக்காதே!

கல்லெறியும் பொல்லாக் கனத்த மழையே,

மெல்லப் பூவெறிதல்போல பொழிக!

இங்கே இராஜகுமாரிகள் உறங்குகின்றனர்!

நிலமே, மழைநீரை நிறைய குடிக்காதே,

உள்ளே சில்லிட்டுப் போகும் அவர் மேனி!

அதிர ஊன்றி நடப்பவரே, கவனம் - 

பிள்ளைகளின் அனந்தசயனம் கலையக்கூடும்!

பூக்களெனினும் மெதுவாகப் போடுங்கள்,

காலப் பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள்

கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகின்றனர்!"

இந்த வரிகளின் அர்த்தம் புரியாதவர்கள் வெண்பூத் தட்டுகளுடன் விகாரைகளுக்கு அணிவகுத்து என்ன பயன்? 

நவம்பர் 27 என்பது போராட்ட நாளன்று. ஆயுதத்துடன் புறப்படும் நாளுமன்று. தங்கள் பிள்ளைகளையும் குடும்ப உறவுகளையும் நினைத்து நெஞ்சுருகி ஓவென்று ஒரு கணம் கண்ணீர் விட்டு அழுவதற்கான நாள். இதற்குக்கூடவா நாடாளுமன்றம் சம்மதிக்க வேண்டும்? நீதிமன்ற அனுமதி பெறவேண்டும்? 

ஒரு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. இன்னொரு நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. மற்றொரு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மறுபுறத்தில் துயிலுமில்லத் தூபிகள் உடைக்கப்படுகின்றன. நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்படுகின்றன. நவம்பர் 27 நாளை தடை செய்ய வேண்டுமென முன்னாள் ராணுவத் தளபதி ஒருவர் விடுத்த வேண்டுகோளை நீதிபதி முன்னிலையில் படைத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு உறுதி வழங்குகின்றனர். 

இலங்கை ஒரு நாடு, இங்கு ஒரு சட்டமே என்று நித்தம் நித்தம் போதனை செய்யும் புத்தரின் வம்சத்தினர், இழப்புகளை நினைத்து வருடத்தில் ஒருநாள் உறவுகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் உரிமைகளைக்கூட மறுத்து வருகின்றனர். 

இந்த நாட்டில் என்ன நியாயமோ, என்ன சட்டமோ?

No comments