சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நடுகல் வழிபாடு

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் 21.11.2023 செவ்வாய் 17:45 – 18.15 மணிவரை சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு உணர்வோடு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர் குடும்ப உறவுகளும் உணர்வாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
1990 நவம்பர் 21 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழத் தேசியக்கொடி அவரது பாசறையில் ஏற்றப்பெற்று, நாட்டு மக்களுக்கு அறிமுகஞ்செய்யப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகிய இன்று தமிழீழத் தேசியக்கொடிகள் அணிசெய்ய, எங்கள் மாவீரர்களை நெஞ்சிருத்தி நடுகல் வழிபாடு செய்யப்பட்டது.
இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று 12.30 மணிக்கு பாசல் மாநிலத்தின் மிகப்பிரமாண்ட அரங்காகிய Messe Süd பாசலில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. எங்கள் மானமாவீரருக்கு வணக்கஞ் செலுத்தி, உறுதி எடுக்க தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அணிதிரண்டு வருகை தருமாறு உரிமையோடு அழைக்கின்றோம்.
இதுவரை தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர் திருவுருவப்படங்களை தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை – சுவிஸ் ஊடாகப் பதிவு செய்யாதவர்கள், trfswiss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அவற்றை விரைவாக அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம். அவ்வாறு உங்களால் அனுப்பி வைக்கப்படும் திருவுருவப் படங்கள் வடிவமைப்புச்செய்யப்பெற்று, மாவீரர் நாளில் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
Post a Comment