யாழில் செய்வினை வெட்டுவதாக பணமோசடி


யாழில். பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் , அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

யாழில் உள்ள பணக்காரர்களை இலக்கு வைத்து அவர்களின் தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கும் நபர் ஒருவர் , தனது ஞான திருஷ்டியால் உங்களின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொண்டேன். உங்களுக்கு ஆபத்து வர போகிறது என கூறி அழைப்பை துண்டித்து விடுவார். 

அதனை கேட்டவர்கள் குழப்பத்தில் இருக்கும் வேளையில், மறுநாள் மீண்டும் அவர்களுக்கு அழைப்பு எடுத்து , உங்களுக்கு பெருநஷ்டம் ஏற்பட போகிறது. உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள். அந்த செய்வினையை உடனே அகற்ற வேண்டும். நான் ஒரு மாந்திரீகவாதி என்னால் மட்டுமே அதனை அகற்ற முடியும் என கூறி சில பொதுவான பிரச்சனைகளை கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் செயற்படுவார். 

ஒருவாறு அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும் , அவர்களிடம் முற்பணமாக ஒரு பெரும் தொகை பணத்தை அவர் சொல்லும் வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட சொல்லுவார். பணம் வைப்பிலிடப்பட்டதும் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்துவிடும் அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயத்தை அவர்கள் அறிந்து கொள்வார்கள். 

குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு அவரின் பெயர் விபரங்கள் தெரியாததாலும், சிலர் தமது அந்தஸ்து கருதி முறைப்படு செய்ய முன் வராததால் அந்நபரின் ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டே உள்ளதால் அது தொடர்பில் மக்களே விழிப்பாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர். 

No comments