ஹமாஸ் ஊடான ரணிலின் தனிப்பார்வை: தமிழர் விவகாரத்தில் மாறுபடும் முரண்! பனங்காட்டான்


இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை விடயத்தில் உள்நாட்டில் எப்படிக் கையாள்கிறார்கள்? ஹமாசுடன் பேசுவது இலகுவாக இருக்குமல்லவா என்று உலக வல்லாதிக்கத்துக்கு அறிவுரை கூறும் ரணில் விக்கிரமசிங்க, தனது நாட்டின் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் எந்த அளவுகோலை பயன்படுத்துகிறார்? ஜனாதிபதியாகி ஒரு வருடம் முடிந்தும் வழங்கிய உறுதிமொழிகளில் எதனையாவது நிறைவேற்றினாரா? 

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையும் ஊடகங்களையும் ஆக்கிரமித்து வந்த ரஸ்ய - உக்ரேனிய போர் இப்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளின் தாக்குதலும் ஹாசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் 'கரண்ட் செய்திகள்'.

மனந்திறந்து சொல்வதானால் இந்த நிகழ்வுகளை செய்திகள் என்று வெறுமனே சொல்வது நன்றன்று. அப்பாவி மக்கள் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் களத்தை நினைவூட்டுகின்றன. 

ரஸ்ய - உக்ரேன் போர், தாய்வானைச் சுற்றிவளைக்கும் சீனக் கப்பல்கள், கனடிய - இந்திய ராஜரீக முறுகல் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித அவலத்தைக் குறி வைக்கும் நிகழ்வுகளே இடம்பெறுகின்றன. 

தங்கள் நிலத்தைக் காப்பாற்ற எத்தனிக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள்தான் முதலில் தாக்குதலை ஆரம்பித்தனர். அதற்குப் பதிலடியாக ஹாசாவையே நாசமாக்கும் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. 24 மணிநேரத்துக்குள் ஹாசாவின் வடபுல மக்களை - 1.1 மில்லியன் பேரை அவ்விடத்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற அறிவித்தலை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. 

இதனை வாசிக்கும் வேளையில் இதன் அடுத்த கட்டத்துக்கு அனைத்தும் நகர்ந்திருக்கலாம். எத்தனை பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள், அடுத்தடுத்து இரு தரப்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட போகிறார்கள் என்பதை எவராலும் சொல்ல முடியாது. மற்றைய நாடுகள் இங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றன. ஆனால், ஏதுமறியாத போரிட மக்களைக் காப்பாற்ற ஆத்மசுத்தியாக ஏதும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மட்டும் அப்பாவி மக்களின் உயிருக்காக குரல் கொடுக்கிறது. சிக்குப்பட்டுள்ள மக்களை வெளியேற ஒரு வாசலைத் திறந்து விடுமாறு மன்றாடுகிறது. ஆனால் அதுவும் செவிடன் காதில் சங்கு போலவே காணப்படுகிறது. 

முள்ளிவாய்க்கால் மனித அவலக் காலத்தில் பல சர்வதேச ஊடகங்கள் வல்லாதிக்க மேலாண்மை சார்புச் செய்திகளை எடுத்துச் சென்றன என்பது பலருக்கும் தெரியும். இப்போது இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடி காலத்திலும் அதே கோலந்தான். மெத்தப்பெரிய - அரசியல் செல்வாக்கான - முதலாளித்துவ நாடுகள் ஒருபக்கம் சாய்ந்துவிட்டன. அடிபாட்டுக்குள் சிக்கும் மக்களுக்கான குரல்கள் ஓரங்கட்டப்படுகின்றன. 

இலங்கையைப் பொறுத்தளவில் இரண்டு குரல்களை இதனை எழுதும்வரை கேட்க முடிந்தது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் தரப்பிலிருந்து வந்துள்ளன. எனினும் இரண்டிலும் ஒருவகை ஒற்றுமையைக் காணமுடிகிறது. ஆனால், அதற்கான காரணம் வேறு. 

முன்னர் ரெலோ இயக்கத்தில் முக்கியஸ்தராகவிருந்த, தற்போதைய தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஓர் அறிக்கை மூலம் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிலும் ஹாசாவிலும் (பாலஸ்தீனியர்) பொதுமக்கள் உயிரிழப்பும், பாதிப்புகளும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள இவர், இதன் பின்னணியை அரச பயங்கரவாதத்துக்கும் விடுதலை இயக்கத்தின் பயங்கரவாதத்துக்குமான போர் என்று வகைப்படுத்தியுள்ளார். 

அதேசமயம், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியதை சாட்டாக வைத்து ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள ஹாஸா பிரதேசத்தை அடித்து தரைமட்டமாக்குவதற்கான காரணம், இப்பிரதேசத்தை இரண்டு துண்டுகளாக்கி அதில் ஒன்றை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிடும் இலக்கு என்று  பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் சிறீகாந்தா. 

1993ல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலியத் தலைவர் யிற்சக் ரபினும் பாலஸ்தீனத் தலைவர் ஜசீர் அரபாத்தும் செய்த ஒப்பந்தம் செயலிழந்துபோனதால் உருவான சூழ்நிலையின் உச்சமாக தற்போதைய மோதல் இருப்பதையும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மறுதரப்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தமது கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த உரையில் இஸ்ரேலில் செல்வாக்கு செலுத்தி வரும் வல்லாதிக்க நாட்டினை நோக்கிய ரணிலின் பார்வை என்ன என்பதையும் அறிய முடிகிறது. இந்த உரையின் முக்கிய பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:

'வளர்ந்து வரும் புதிய உலகின் போக்கு என்னவென்று நான் ஓய்வாக இருந்தபோது சில கருத்துகளை எழுதினேன். நேற்று அதனை கிழித்து விட்டேன். நேற்றைய எனது கருத்துகள் இன்று தேவையற்றதாகியுள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு என்ன நடைபெறப் போகிறது? அரசியல் அதன் இடத்தைப் பெறுவதை நாங்கள் காணலாம். இஸ்ரேல் இப்போது இப்போருக்காக ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளது. ஹமாஸை அழிப்பது ஒரு விடயம். அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான எதிர்வினை என்ன? ஹாசாவை அழித்தால் 24 மணிநேரத்தில் முழு நிலைமையும் மாறும். இங்கிருந்து இந்தோனேசியாவுக்கும் பிற இடங்களுக்கும் சென்றால் அரசாங்கங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்" என்று கூறிய ரணில் மேலும் பின்வருமாறு சொன்னார்: 

'ஒருபுறம் இஸ்ரேலிலுள்ள ஒற்றுமை அரசாங்கம் (கூட்டரசாங்கம்) பதிலடி கொடுக்க விரும்புகிறது. இவர்கள் ஹாஸாவுக்குள் சென்றால் முழு மத்திய கிழக்கும் தீப்பற்றி எரியும். இது நம் அனைவரையும் பாதிக்கும். ஒரு பக்கம் துருக்கி, மறுபக்கம் பிலிப்பைன்ஸ் என்று இது மத்திய ஆசியாவைப் பாதிக்கும். அடுத்த சில நாட்களில் என்ன நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும். அதிபர் பைடனின் சப்பாத்துக்குள்  நான் இருக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்சனையை அவர் எப்படிக் கையாள்கிறார்? இரு தரப்பிலும் கூட்டணிக் கட்சிகள் இருப்பது மோசமானது. யூதர்களின் வாக்கு வங்கியையும், காங்கிரஸிடம் பேசுவதிலுள்ள சிரமத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் தலைமையுடன் பேசுவதைவிட ஹமாஸ_டன் பேசுவது அவருக்கு எளிதாக இருக்கலாம். அது எவ்வளவு மென்மையானது. அவரது முடிவுகளைப் பொறுத்தே என்ன நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும். எல்லாமே நாளை மாறக்கூடும். இப்பொழுது பின்வாசல் ராஜதந்திர முறையாக சில விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் தீர்வு காண முடியாவிடின் உலகின் புதிய போக்கு என்ன என்பதை மீண்டும் முடிவு செய்ய வேண்டி வரும்" என்ற இந்த உரையை சாதாரணமான ஒன்றாக பார்க்க முடியாது. நிதானமான யதார்த்தமான தலைமைத்துவ பண்புள்ள பார்வையின் வெளிப்பாடு. 

அதிபர் பைடனின் சப்பாத்துக்குள் இருக்க தான் விரும்பவில்லை என்ற சொல்லாடலின் ஊடாக தமது நிலைப்பாட்டை ரணில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதே இங்கு முக்கியமானது. 

இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனையில் தமது கருத்தை அம்மணமாகக் கூறும் துணிச்சல் அல்லது அசாதாரண நேர்மை கொண்ட ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சனைத் தீர்வை ஏன் வேறு விதமாகக் கையாளுகிறார்? 

2002ல் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்தபோது பின்கதவால் அதனை முறியடிக்கவென புலிகள் அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தி கருணாவை தம்பக்கம் கொண்டு போனார். 

தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் இனப்பிரச்சனைக்கான தீர்வை கடந்த பெப்ரவரி 4ம் திகதிக்கு (சிங்கள தேச சுதந்திர நாள்) முன்னர் அறிவிக்கப் போவதாக உறுதியளித்தார். நடைபெற்றதா? லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புடன் நடத்திய உரையாடலில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வழங்கப்படுமென்று நம்பிக்கை ஊட்டினார். நடைபெற்றதா? 

ஒவ்வொருவரினதும் மத வழிபாட்டு உரிமைக்கு போதிய பாதுகாப்பு இருக்குமென்று சொல்லி வந்தார். குருந்தூர் மலை விவகாரத்தில் நீதியாகத் தீர்ப்பளித்த நீதிபதிக்கு என்ன நிகழ்ந்தது? நீதிபதி எதற்காக நாட்டைவிட்டு ஓடிப்போனார்? 13ம் திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதி. அது முழுமையாக நிறைவேற்றப்படும் என்றவர் பின்னர், காவற்துறை அதிகாரம் கிடையாது என்று சொன்னார். 13ம் திருத்தம் என்னாயிற்று? 

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை கேட்ட ஜெனிவா தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசில் பிரதமராக இருந்தபோது இணைஅனுசரணை வழங்கினார். ஜனாதிபதியான பின்னர் ஏன் அதனை நிராகரி;த்தார்? இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் 13வது அரசியலமைப்புத் திருத்தம் இலங்கையின் நிறைவேற்றுத்துறையும் சட்டத்துறையும் சம்பந்தப்பட்டதால் அதனை நிறைவேற்றியே தீருவேன் என்றார். செய்தாரா?

பாலஸ்தீன மக்களின் உரிமைக்குரலுக்காக சர்வதேச அரங்கில் நியாயம் கூறுபவர், தனது நாட்டில் பாலஸ்தீன மக்கள் போன்று உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழின மக்கள் விடயத்தில் மாறுபாடாக நடந்து கொள்வது ஏன்? எதற்காக இரு நிலைப்பட்ட முரண்பாடு? ஊருக்கு உபதேசம், உனக்கல்ல என்ற சீத்துவக்கேடா?

No comments