வெள்ளைப் பொஸ்பரஸ் மூலம் இஸ்ரேல் தாக்குதல்??


இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் நான்காவது நாளாக இன்றும் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக கூறி பாலஸ்தீனர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நெருப்பு மழை பொழிவது போன்று தெரிகிறது. ஆனால், இந்த வீடியோ உண்மையில் காசாவில் பதிவு செய்யப்பட்டதா? சமீபத்திய வீடியோவா? என்பது குறித்த முழுமையான தகவல் இல்லை.

வெள்ளை பாஸ்பரஸ் என்பது விரைவில் தீப்பற்றி எரியக்கூடிய இரசாயனமாகும். இது காற்றில் வெளிப்படும் போது விரைவாகவும் பிரகாசமாகவும் எரிகிறது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இராணுவங்கள், எதிரிகளின் இலக்கை அழித்து சேதப்படுத்துவதற்கான நெருப்பு ஆயுதமாக வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துகின்றன. 

இந்த இரசாயனம் தீப்பற்றும்போது அதிக வெப்பத்தை (சுமார் 815 டிகிரி செல்சியஸ்), ஏற்படுத்துவதுடன் அடர்த்தியான வெள்ளை நிற புகையை வெளியிடுகிறது. பதற்றமான பகுதிகளில் எதிரிகளை நிலைகுலையச் செய்வதற்கான புகை மண்டலத்தை உருவாக்க இந்த இரசாயனத்தை இராணுவங்கள் பயன்படுத்துகின்றன.

No comments