கடப்பாடு இருக்கின்றது:எம்.ஏ.சுமந்திரன்!முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இன்று(01) நடைபெற்ற மக்களுக்கான குடிநீர்திட்டம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தன்னுடைய கடமையினை செய்தமைக்காக அச்சுறுத்தப்பட்ட பிறகு அவர் உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு பெரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் சொல்லி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் நான் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.

நீதித்துறை எந்தவிதமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதன் வெளிப்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தில் தான் பெரிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறை மோசமாக பாதிக்கப்படுகின்றது நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது என்பது எங்கள் நாட்டின் சரித்திரத்துடன் ஒன்றிய விடயம் புதிய விடயமல்ல ஒரு சில நீதிபதிகள் அழுத்தங்கள் காரணமாக பதவிகளை விட்டு நாட்டைவிட்டு வெளியேறிய தருணங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.


இந்த தடவைதான் முதல் தடவையாக அப்படியாக வெளியேறுகின்ற ஒருவர் வெளிப்படையாக அதனை சொல்லி அறிவித்துவிட்டு பதவி விலகி நாட்டை விட்டு போயுள்ளார்.


நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததை இன்று உலகளாவியரீதியில் மறுக்கமுடியாத ஒரு அறிவிப்பாக இந்த செயற்பாடு அமைகின்றது.


அவருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்பது எவரும் மறுக்கமுடியாத விடயம் அவருக்கு கடந்த மாதங்களில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட பொழுது இந்த இடத்திலும் வேறு இடத்திலும் போராட்டங்கள் நடந்தன நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற நிலையியல் கட்டளையினை மீறி சரத்வீரசேகர உரையாற்றி இருக்கின்றார் என்று நான் ஒழுங்கு பிரச்சினை ஒன்றினை எழுப்பி இருந்தேன் நாடாளுமன்ற ஒழுங்குகள் பற்றிய குழுவிற்கு அது பாராப்படுத்தப்பட்டுள்ளது.


நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது.தொடர்ச்சியாக இந்த விடயத்தினை உலகத்தில் பல நாடுகள் திரும்பி பார்க்கும் வண்ணமாக பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க இருக்கின்றோம்.


இந்த நாடு கடனாளியாகவும் கடனை திருப்பி செலுத்த முடியாத ஒரு நாடாகவும் இருந்து கொண்டிருக்கின்றது எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுவதில்லை இவ்வாறான பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் புலம்பெயர்ந்த உறவுகள் அதனையும் கருத்தில் கொண்டு தங்களாலான உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.


எங்களுக்கான நீதி என்பது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது அதில்இருந்து நாங்கள் மீண்டெழுவதற்கான போராட்ட பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் மாறுபட்டாலும் தொடர்ச்சியாக இந்த இன விடுதலையடையும் வரைக்கும் நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம் மக்கள் சார்ந்ததாக இருக்கும் மக்களின் முழுப்பங்களிப்புடன் அது நிகழும்” என்றும் தெரிவித்துள்ளார்.

No comments