திருமலை பறிபோகிறது:கண்டுபிடித்த சுமா?
தமிழர் தாயகமான திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்டகாலத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தற்போது துரித கதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குச்சவெளி பிரதேச செயலக பிரிவிலே 30க்கு மேற்பட்ட புத்த சிலைகளையும், பௌத்த வணக்கஸ்தலங்களையும் உருவாக்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
அதில் 23 இடங்களில் கட்டட வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
பௌத்த சமயத்தவர்கள் எவரும் வாழாத, ஒருவர் கூட இல்லாத பிரதேசங்களில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதனை தடுப்பதற்கான உத்தரவுகள் ஆளுநர் மட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் நேரடியாகவே கட்டிட வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்.
எந்தவிதமான சட்டபூர்வமான அதிகாரமும் இல்லாமல் - அனுமதியும் பெறாமல் எல்லாம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
அதற்கு முக்கியமான காரணம் இந்த மாவட்டத்தை ஒரு சிங்கள பௌத்த மாவட்டமாக காண்பிப்பதற்கான பிரயத்தனம் எடுக்கப்பட்டிருக்கிறது.
சமூகங்களுக்கு இடையிலே முறுகலை தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வேண்டும் என்றே உருவாக்கப்படுவதனை காணக் கூடியதாக இருக்கிறது. பிரதானமான குறைபாடு என்னவென்றால், அரச நிறுவனங்கள், அரச அதிகாரிகளின் அனுசரனையோடு நில அபகரிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் தான் திருகோணமலையில் நில ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகிறதென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment