முப்படைகளிடம் நாட்டை விட்டு செல்லவேண்டாமென்கிறார் ரணில்
அடுத்த ஐந்து வருடங்களில் உலகம் பெரும் மாற்றங்களை சந்திக்கப் போவதாக கண்காணிப்புக்களில் தெரியவந்துள்ளதால், அபிவிருத்தி அடைந்த நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
“முப்படைகளினதும் ஆட்சேர்ப்பு பிரிவு அல்லது சிவில் பிரிவைப் பிரதிநித்துவப்படுத்தும் அதிகாரிகள் என்ற வகையில் பட்டத்தை பெற்றுக்கொண்டு நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தை கடந்து செல்வதா? அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஒரு தேசமாக பல்வேறு சவால்களுக்கும் நிலையற்ற தன்மைகளுக்கும் முகம்கொடுத்தோம். அதன் விளைவாக தங்களது இலக்குகளை அடைய பலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணத்துடன் இருக்கின்றனர். எவ்வாறாயினும் இலங்கை, இலகுவானதாக இல்லாவிட்டாலும் நிலையான ஒரு பொருளாதார கொள்கையை தற்போது பின்பற்றுகிறது. அதனால், பணவீக்கத்தை குறைத்தவுடன் வருமான வழிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அடுத்த 10 வருடங்களுக்குள் பல்வேறு பொருளாதார மாற்றங்களை உலகம் சந்திக்கப் போகின்றது என்று கூறப்படுகிறது. கனடா மற்றும் ஐரோப்பா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. எதிர்காலம் தொடர்பில் உங்கள் அவதானம் செலுத்தும் போது மேற்படி சவால்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நீங்கள் உள்நாட்டில் தொழில் செய்து நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் போது, சிறந்த பொருளாதார நிலையை நாட்டிற்குள் உருவாக்க முடியும்.
இலங்கையில் 450இற்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அவற்றை பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வியற் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். அதனால் தொழில்வான்மை மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். தொழில் திறன் கொண்ட பிரஜைகளுடன் இலங்கையின் கதவுகளை உலகிற்கு திறக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப தெரிவுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இராணுவத்தினரும் சிவில் சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான கட்டமைப்பாக பல்கலைக்கழகங்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
Post a Comment