முன்னுதாரணமான பூநகரி பிரதேசசபை!



பூநகரி பிரதேசசபை பொது நூலகத்தில் வன்னியின் முதலாவது இலத்திரனியல் நூலகம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் இலத்திரனியல் நூலகம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பின்தங்கிய பூநகரியில் முதலாவது இலவச கணணி மையத்துடன் கூடிய இலத்திரனியல் நூலகம் மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களிற்கான வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

இணைய வசதியுடன் கூடியதும் சலுகையுடன் அச்சிடும் வசதிகளையும் கொண்டதாக இலத்திரனியல் நூலகம் உருவாகியுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 31ம் திகதி பல்லவராயன்கட்டு உப நூலகத்திலும் கணணி வலைப்பின்னல் வசதிகளுடனான இலத்திரனியல் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதேசசபை செயலாளர் தனது உரையினில் தெரிவித்திருந்தார்;.

அதனை தொடர்ந்து  முழங்காவில் மற்றும் வேரவில் நூலகங்களும் இலத்திரனில் வசதிகளை உடைய நூலகமாக பரிணமிக்குமெனவும் தெரிவித்தார்.

யுத்தத்தின் அவலங்களை சந்தித்து சுமார் 30 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் அலைந்து திரிந்த பூநகரி பிரதேசசபை தற்போது படிப்படியாக மக்களிற்கான அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கி வழங்குவதில் வெற்றி கண்டுவருகின்றது.

அவ்வகையில் பூநகரி நூலகங்களில் உருவாக்கப்பட்டுள்ள கணணி வசதி மற்றுமொரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

அதேவேளை சிறார்களது வாசிப்பினை ஊக்குவிக்குகமாக தலைமை நூலகத்தில் உருவாக்கப்பட்ட நவீனமயப்படுத்தப்பட்ட சிறார் கூடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நவீனமயப்படுத்தப்பட்ட சிறார் கூடங்கள் பல்லவராயன்கட்டு,முழங்காவில் மற்றும் வேரவிலில் உப நூலகங்களிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பூநகரி பிரதேசசபை பொது நூலகத்தில் வன்னியின் முதலாவது இலத்திரனியல் நூலகம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.



No comments