பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!


அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் 

”அண்மையில் அனுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது, பேருந்தில் இருந்து ஒரு சிறிய காகித துண்டு வீசப்பட்டது.

குறித்த காகிதத் துண்டில் மீண்டும் கொழும்பைத் தாக்க நாங்கள் தயார் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்  அதில் உண்மை இல்லை எனத் தற்போது  தெரியவந்துள்ளது. 

இதேவேளை தற்போது பாதாள உலகக் குற்றச் செயல்கள் குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக தென் மாகாணத்திலும், மேல் மாகாணத்தில் சில இடங்களிலும் ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளால் வழிநடத்தப்படுகின்றன.

எனவே இப்பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளையும் எதிர்வரும் 06 மாதங்களில் முற்றாக நிறுத்துவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களும் உள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments