இந்தியா - கனடா உறவில் விரிசல்: இராஜந்திரிகள் வெளியேற்றம்!!


கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் இந்திய புலனாய்வு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை அடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை ஒட்டாவா வெளியேற்றிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவர் ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லியின் முடிவு, எங்கள் உள் விவகாரங்களில் கனேடிய இராஜதந்திரிகளின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாடு குறித்து அதிகரித்து வரும் கவலையை பிரதிபலிக்கிறது என்று அமைச்சகம் இன்று செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக இருப்பதால் இராஜதந்திரிகள் வெளியேற்றங்கள் வந்துள்ளன. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தடம் புரண்டதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட இந்தியாவிற்கான வர்த்தகப் பயணத்தை கனடா இரத்து செய்தது.

இதேநேரம் கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை சம்பவத்தில் இந்திய அரசின் புலனாய்வுத்துறைக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.

கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்தி கூறினார். இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

No comments