கொழும்பை நெருங்கும் சீனாவின் உளவுக் கப்பல்


ஷி யான் 6 எனும் சீனாவின் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி, ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பற்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அனுமதி வழங்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த கப்பல் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான தமது பயணத்தையும் இரத்து செய்திருந்தார்.

நிதி சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் முக்கிய பங்காளிகளாகக் கருதுகிறது.

இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடம் 7.1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள இலங்கை, அதில் கணிசமான பகுதியான 3 பில்லியன் டொலரை சீனாவுக்கு செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments