இலங்கை நீதி ஒவ்வொரு வகை!
இலங்கையின் நீதி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வரையறையில் உள்ளமை மீண்டும் அம்பலமாகியிருந்தது.
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு கல்முனையில் நினைவேந்தல் நடாத்துவதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சந்திரசேகரம் ராஜனுக்கு திலீபனின் நினைவேந்தலை முன்னிறுத்தி தொடரப்பட்ட உண்ணாவிரதப்போராட்டத்தை தடை செய்ய கோரி தடை உத்தரவை இரண்டு காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட கல்முனை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்ததுடன் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கும் தடை விதித்திருந்தது.
இதனிடையே நினைவேந்தலிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொட்டான் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் மற்றும் திருகோணமலை காவல் நிலைய பிரதேசம் ஆகிய இடங்களில் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள், அணிவகுப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுக காவல்துறையினால் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொழும்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் யாழ்ப்பாணத்தில் அரச உயர்மட்டம் முன்னெடுத்த தடை கோரும் முயற்சிகள் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment