மீண்டும் அகழ்வு ஆரம்பம்!இலங்கை படைகளால் அரங்கேற்றபபட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி  நாளை புதன்கிழமை (06) காலை 7.30 க்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று (05) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் திணைக்கள சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் ஆகியோர் கள நிலைவரங்களை ஆராய்ந்தனர்.

பயணம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது புதன்கிழமை (06) காலை 7.30 க்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

முன்னதாக புதைகுழி அகழ்விற்கான நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி அலுவலகத்தால் விடுவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் தாமதித்தே விடுவிக்கப்பட்டிருந்தது.

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ள நிலையில் புதைகுழி அகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.


No comments