ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லையாம்.


ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டியத் தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியாக நாம் கொள்கையுடன் பயணிக்கிறவர்களே ஒழிய, சந்தர்ப்பவாத அரசியலை நம்பி பயணிப்பவர்கள் கிடையாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம்.

இந்த நிலையில், நாம் கொள்கைகளுக்கு அப்பாற் சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டியத் தேவை எமக்கு இருக்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதலை கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பயன்படுத்தப்பட்டது என்றும் இதற்கு அப்போது இருந்த புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டடிருந்தது என்றும் சனல் 4 வின் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நல்லாட்சி அரசாங்கம் தான் ஆட்சியில் இருந்தது. ஜே.வி.பியும் அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது.

அந்தக் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட நாம் அனைவரும் எப்.சி.ஐ.டியிலும் பொலிஸ் நிலையத்திலும் சிறைச்சாலையிலும்தான் எமது பெரும்பாலான காலத்தை கழிக்க நேரிட்டது.

இவ்வாறு இருக்கும்போது, ராஜபக்ஷக்கள் இணைந்து புலனாய்வுப் பிரிவின் தலைவரை தேடிப் பிடித்து எவ்வாறு ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியும்?

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அன்று எங்கு இருந்தார்கள்?

அதில் ஒரு பயங்கரவாதி ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்.

இன்னொருவர் ஜே.வி.யின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றில் இருந்த ஒருவரின் மகனாவார்.

இப்படியான இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்படுவார்களா?

அப்படியானால், நீங்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த தரப்பினராகத்தான் கருதப்படுகின்றீர்கள்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சனல் 4 நிறுவனமானது ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து செயற்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும்.

இதனை நாம் ஒரு ஊடகமாக கருதவில்லை. திரைப்படங்களை வெளியிடும் ஒரு நிறுவனமாகவே நாம் அதனை பார்க்கிறோம். – என்றார்.

No comments