இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

 


இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை தமிழ் மக்கள் கோரி வருவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறையில் அதனை அடைவதற்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஆணை வழங்கி வருவதாகவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதியளித்திருந்ததாகவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் நிலங்களில் சுயாட்சியுடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பைப் பெறுவதற்காக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் தாம் தொடர்ச்சியான ஆணையை பெற்றுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவாக வழங்கியுள்ளதாகவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.இந்த பின்புலத்தில் சுயாட்சிக் கட்டமைப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்தவொரு சமரசமும் இன்றி அரசியலமைப்பினால் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துமாறு தாம் வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments