ஒருபுறம் உள்ளே:மறுபுறம் பிணை!!

 


இலங்கையின் சுதந்திரதின மறுப்பு போராட்டத்தில் பங்கு பற்றியயமைக்காக இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் மற்றும் கே.சிவாஜிலிங்கம்,வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி  பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேசசபை முன்னாள் தவிசாளருக்கு எதிராக காவல்துறையால்  தொடுக்கப்பட்ட வழக்கிற்காக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அனைத்து சட்டத்தரணிகளும் ஒரு முகமாக எழுந்து வழக்கினை எதிர்கொண்டு நியாயத்தை சுட்டிக்காட்டிய நிலையில் பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே முல்லைதீவில் குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்றையதினம்(07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று, காலை 10.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.


தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் கஜபாகுபுர , சம்பத்நுவர, ஜனகபுர, கலியாணபுர பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி கடந்த சனிக்கிழமையன்று(05)  மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் கால்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபும், குமுழமுனை தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த 17 தமிழ் பொதுமக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பொதுமக்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், என பலரும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments