13 இனை கொடுக்க சொன்னராம் மோடி!

 


இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று நேரில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்றும் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றிருந்தது. 

இதனிடையே தமிழ்த் தலைவர்களுடன் நாம் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். அவர்களும் மக்களின் நலன் கருதி அதனைக் கருத்தில்கொண்டு செயற்படுவார்கள் என்று எண்ணுகின்றேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 “ஜனாதிபதியால் மாத்திரம் அரசியல் தீர்வை வழங்கமுடியாது. அவரால் யோசனைகளை மாத்திரம் முன்வைக்க முடியும். சர்வ கட்சிகளைக் கொண்ட நாடாளுமன்றம் தான் அரசியல் தீர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும். இது பழுத்த அரசியல்வாதி சம்பந்தனுக்குத் தெரியும். அவர் கூறும் வெளியக சுயநிர்ணய உரிமை என்னவென்று எனக்குப் புரியவில்லை.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுடனான பேச்சுத் தொடரும். அது தொடர்பில் நாடாளுமன்றம் முடிவுகளை எடுக்கும்.” – எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


No comments