அமெரிக்கா அனுமதிக்காது!

 


வடகிழக்கு தமிழர் பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மீதான அதிகரித்துவரும் வன்முறைகள் அச்சத்தை தருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பணியின் போது கொல்லப்பட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டனர்.தாக்கி அச்சுறுத்தப்பட்டனர்.

அத்தகைய இருண்ட யுகத்தை நோக்கி இலங்கை செல்கின்றதாவென்ற அச்சம் எழுந்துள்ளது.மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான நேற்றைய அச்சுறுத்தல் அதற்கொரு உதாரணமாகுமெனவும் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு தீடிர் விஜயம் செய்த அமெரிக்க தூதர், சிரேஸ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே கிழக்கில் ஊடகவியலாளர்களை வாகனத்துடன் தீயிட பிக்கு ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் வடகிழக்கு ஊடகவியலாளர்கள் தமது ஊடகப்பயணத்தில் சுதந்திரமான அறிக்கையிடலிற்காக தனது குரலை அமெரிக்க அரசு தொடர்ந்தும் எழுப்புமென தெரிவித்த தூதர் கடந்த கால இருண்ட யுகங்களை நினைவு கூர்ந்தார்.

ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் கூடிய அக்கறை செலுத்த கேட்டுக்கொண்ட அவர் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களது பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான அறிக்கையிடல் தொடர்பில் அமெரிக்க அரசு ஆற்றிய பங்களிப்புக்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஊடகவியலாளர்கள் மீதான இனவாத அச்சுறுத்தல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிடின் ஆபத்தான சூழலை எதிர்கொள்ளவேண்டியிருக்குமெனவும் அமெரிக்க தூதர் சுட்டிக்காட்டியிருந்தார். 


No comments