மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது


குருந்தூர் மலை விவாகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அவமதித்து கருத்து வெளியிட்ட தென்னிலங்கை அரசியல் வாதிகளின் செயற்பாட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்கு உள்ளே சில மதவாத அரசியல் வாதிகள் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களை ஆத்திரமூட்டுவதாக இருக்கின்றது.

குருந்தூர்மலை விடயம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உடன்பாடு இல்லை எனில் அதை மேல்முறையீடு செய்வதற்கும் அல்லது உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் எமது நாட்டு சட்டத்தில் வழிவகைகள் உள்ளது.

அவ்வாறு இருக்கும்போது தென்னிலங்கையில் நலிவடைந்த மலிவடைந்து போகும் சில அரசியல் பிரமுகர்கள் மதத்தை முதலீடாக்கி தமது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கின்றனர். 

அதன் வெளிப்பாடாக நீதித்துறையை இனவாத ரீதியில் விமர்சிக்க தலைப்பட்டுள்ளனர்.

இவ்வாறான கருத்துக்கள் இன நல்லிணக்கத்தில் இடைவெளியை உருவாக்கும் ஒன்றாகவே அமைகின்றது. அந்தவகையில் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும் தனிப்பட்ட ரீதியில் நீதிபதியை விமர்சிப்பதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார். 

No comments