பொங்குவதற்கு கூட உரிமையற்றோம்! முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்கள் மீது இலங்கை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்றைய தினம் காலை வேளையிலே குருந்தூர் மலை பகுதியில் பொங்கல் நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்த நிலையிலே தமிழ் தரப்புகள் பொங்கல் நிகழ்வுக்காக அங்கு சென்றிருந்தனர்.

இதற்கு முன்னதாக, குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையின் விகாராபதி கலகமுக சாந்தபோதி தேரரின் அழைப்பிற்கு அமைய சிங்கள மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் அடங்கலான இரண்டு பேருந்துகளில் வந்தவர்கள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதேநேரம் தமிழ் தரப்புக்கள் வருகை தந்து அந்தக் குருந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலே பொங்கல் பொங்க முற்பட்ட போது அங்கு வருகை தந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள மக்கள் அவர்களோடு காவல்துறையினர் இணைந்து தொல்பொருள் பிரதேசத்தில் நெருப்பு மூட்ட முடியாது என தடுக்க முற்பட்டனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பொங்குவோம் எனக்கூறி கற்களை அடுக்கி விறகுகளை வைத்து நெருப்பு மூட்டிய போது அந்த இடத்தில் நின்ற காவல்துறை அதிகாரிகள் சப்பாத்து கால்களால் அந்த நெருப்பை அணைத்து பொங்கல் பொங்குவதை தடுத்தனர்.

முன்னதாக முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றைய தினம் இடம்பெறும் பொங்கல் நிகழ்வுக்கு தடை உத்தரவை வழங்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments