உறுதியாக இருக்கிறோம்!

 


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு பேரணியானது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பயணித்த பேரணி முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்திருந்தது.

போராட்டத்திற்காக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து திரண்டுவந்திருந்த ஆயிரக்கணக்கிலான மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். உண்மைகள் வெளிக்கொணரப்படும் வரை தமது குரல்கள் ஓயாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்திருந்தன.

அதேவேளை சர்வதேச விசாரணை ஒன்றே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு உரிய தீர்வை வழங்கும் . கொக்கிளாயில் பல மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் 2009 யுத்தம் முடிவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டும் காவல்துறை, இராணுவத்தில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் எங்கு போனார்கள்? எங்கு அடைக்கப்பட்டார்கள்? எங்கு புதைக்கப்பட்டார்கள்? என்பது எதுவுமே இதுவரை தெரியாது. எனவே உள்ளக விசாரணை என்பது சாத்தியப்படாத ஒன்று. உள்ளக விசாரணை அன்றி நிச்சயமாக சர்வதேச விசாரணையின் கீழ் இது விசாரிக்கப்படுமாக இருந்தால் தான் உண்மைகள் வெளிப்படுமெனவும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.No comments