அன்றாட இயல்பு நிலை பாதிப்பு!வடகிழக்கு மாகாணங்கள் எங்கும் இன்று முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பினால் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுப்போயிருந்தது.

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

யாழ்.மாவட்டத்தில் யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம், வர்த்தக நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது.

உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படடிருந்தன.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்ற போதிலும் மதியத்துடன் அவை தடைப்பட்டன.எனினும்  தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.யாழ்ப்பாணத்திலிருந்தான நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு ,மல்லாவி, உடையார்கட்டு, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரங்களில் கடைகளை மூடி போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்கியிருந்தது. இன்று போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதோடு, பாடசாலைகள் பலவும் மாணவர்கள் வரவின்மை காரணமாக இயங்கவில்லை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரசியல் கட்சிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

இன்றைய தினம் மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தனர் அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அணைத்து தனியார் சேவைகளும் இன்றையதினம் இயங்கவில்லை 

வவுனியாவில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் மரக்கறி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தையும் மூடப்பட்டிருந்தது.

வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்;சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் இணைந்து கதவடைப்பினை முன்னெடுத்திருந்தன.


No comments