கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் சாவகச்சேரியில் பழுது


கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் (Fingerprint machine) பழுதடைந்துள்ளமையால் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

ஒன்லைன் மூலம் கடவுசீட்டினை பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் , சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வார கால பகுதிகளாக பழுதடைந்துள்ளது. அதனால் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கைவிரல் அடையாளம் வைக்க முடியாத நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

கடவுசீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது , எந்த பிரதேச செயலகத்தில் கைவிரல் அடையாளம் வைக்க விரும்புகிறோம் என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.  அவ்வாறு தெரிவு செய்யும் பிரதேச செயலகத்திற்கு கைவிரல் அடையாளம் வைக்க வருமாறு எமது தொலைபேசிக்கு குறுந்தகவல் கிடைக்கப்பெறும். அதன் பின்னர் அந்த பிரதேச செயலகத்திற்கு சென்று எமது கைவிரல் அடையாளத்தை வைக்க முடியும். 

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இயந்திரம் பழுந்தடைந்துள்ள விடயத்தினை அதிகாரிகள் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தாதமையால் சாவகச்சேரி பிரதேச செயலகத்தை தெரிவு செய்த நாம் சிரமங்களையும் நேர விரயத்தையும் எதிர்கொண்டுள்ளோம். 

அதிகாரிகள் ஊடகங்கள் ஊடாக அறிவித்து இருந்தால் , நாம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை தெரிவு செய்து இருப்போம். 

தற்போது இயந்திரம் எப்போது சீராகும் என வினாவினால் , கொழும்பில் இருந்து தொழிநுட்பவியலாளர்கள் வர வேண்டும். எப்ப சீராகும் என தெரியாது என பொறுப்பற்ற வகையில் எமக்கு பதில் அளிக்கின்றனர். 

இயந்திரம் பழுதடைந்த விடயத்தை ஊடகங்களில் அறிவித்து இருந்தால் , நாம் வீணாக அலைக்கழிய வேண்டிய தேவை இல்லை. அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவது எமக்கு கவலை அளிக்கின்றது என பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார். 

No comments