இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு


சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை ஓரளவுக்கு வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நகர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபடாத வகையில் இந்திய பிரதமர் மோடி முன்வைத்திருப்பாரேயானால் அது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிரதமர் மோடியின் வலியுறுத்தல் தொடர்பில் திருப்தியடைவில்லை என்றும், மாறாக அவர் தனது கடமையை செய்திருக்கின்றார் என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியாவே கையெழுத்திட்டது என்றும் எனவே, அவை சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இல்லாமல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா ஆவண செய்ய வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இம்முறை வழங்கப்பட்ட வலியுறுத்தல்கள் வெறும் பத்திரிகை செய்திகளாக நின்றுவிடாமல், அவை உரியவாறு நிறைவேற்றப்படுவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். 

No comments