யாழில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கண்காட்சி


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள், யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் நிவேதிகா கேதீசன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் தெரிவிக்கையில், 

இந்த கண்காட்சியில் தொழில் அமைச்சின் கீழான சகல திணைக்களங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்தியவங்கி என்பவற்றின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

   Glocal Fair கண்காட்சியானது நாளாந்த கடமைகளிற்கு மேலதிகமாக நடமாடும் சேவையை ஏற்படுத்தி மக்களிற்கு வினைத்திறன் மிக்க சேவையினை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்கென தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட Glocal Fair 2023  செயற்றிட்டம் எங்களுடைய சேவையை மக்களிற்கு அருகில் கொண்டு செல்வதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைவதால் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த செயலமர்விற்கு பங்குபற்றுவதை எதிர்பார்க்கின்றோம்.

இதில் தொழில் திணைக்களம் ஊ.சே.நிதி தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன் கீழ்க்காணும் சேவைகள் வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

1. ஊ.சே.நிதி பதிவுகளை பரிசீலித்தல் 

2. ஊ.சே.நிதி பதிவு செய்யாத உறுப்பினர்களை பதிவு செய்தல்.

3. விரலடையாளங்களை பதிவு செய்தல்

4. பெயர் மற்றும் பதிவுகளில் தவறுகள் காணப்படின் திருத்தம் செய்தல்

5. ஆலோசனை சேவைகள்

ஊ.சே நிதி தொடர்பான தகவல்கள் பரிசீலிக்க வருகை தருவோர் அடையாளத்தை உறுதிப்படுத்த தே.அ.அட்டை/  B படிவத்தை எடுத்து வருதல் வேண்டும். அத்துடன் பெயரில் திருத்தங்களை மேற்கொள்ள வருகை தருவோர் தமது தொழில் தருநரின் உறுதிப்படுத்தலுடனான கடிதங்களை எடுத்து வருதல் வேண்டும்.

ஊழியர்கள் ஊ.சே நிதியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை காலதாமதமின்றி தங்கள் நிறுவனத்தில் அல்லது மாவட்டத் தொழில் அலுவலகத்தில் பரிசீலித்து பதிவு செய்யப்படவில்லையாயின் மேற் குறித்த ஆவணங்களுடன் வருகை தருவது இலகுவாக அமையும். என குறிப்பிட்டுள்ளார். 

No comments