கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!


முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைசார் தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

இதில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல தரப்பினர் கலந்துக் கொண்டிருந்தனர்.

சுமார் 2 மணித்தியாலம்வரை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, பலரது கருத்துக்களும் ஆலோசனைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனையடுத்து, நிலைப்பாட்டை அறிவித்த முல்லைத்தீவு நீதவான் பிரதீபன், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட துறைச்சார் திணைக்களங்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் அகழ்வுப் பணித் தொடர்பான தீர்மானத்துக்கு செல்லலாம் எனக் குறிப்பிட்டார்.

இந்த அகழ்வுப் பணியானது, மழைக்காலத்துக்கு முன்பதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான செலவீனங்களை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக இடம்பெற வேண்டும் எனவும் நீதவான் தெரிவித்தார்.

அதேநேரம், சர்வதேச நியமங்களுக்கு அமைய, அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அதனைக் கண்காணிப்பதற்காக பிரவேசிக்கும் எந்தவொரு அமைப்புக்கும் தடையில்லை என்றும் நீதவான் குறிப்பிட்டார்.

No comments