ஜெனிவாவின் தீர்மானங்களும் அறிக்கைகளும் 'கவலை' தெரிவிப்பதனால் என்ன பயன்? பனங்காட்டான்
ஜெனிவா மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக நிறைவேற்றும் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. துயர நிகழ்வுகளில் 'கவலை' தெரிவிப்பது போன்ற அறிக்கைகளாலும் எச்சரிக்கைகளாலும் என்ன பயன்? சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
தமிழருக்கு தீபாவளிப் பெருநாள், தைப்பொங்கல் திருநாள் போன்று முள்ளிவாய்க்கால் வாரம், கறுப்பு யூலை மாதம் என்பவை முக்கியமான நினைவுக் காலங்களாக மாறிவிட்டன. இந்த வரிசையில் தற்போது ஜெனிவாக் காலமும் சேர்ந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் மூன்று தடவை கூடும் மனித உரிமைகள் பேரவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் பொறுப்புக் கூறல், சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறை என்பவற்றை வலியுறுத்தி வருகிறது. நவநீதம் பிள்ளையிலிருந்து பச்சிலற் அம்மையார் வரை நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கையின் எந்தவொரு அரசும் இதுவரை நிறைவேற்றவில்லை. இலங்கையில் கட்சிகளின் ஆட்சிகள் மாறியபோதும், ஜெனிவாவை நிராகரிக்கும் அதன் அடிப்படை நிரலில் மாற்றம் எதுவும் இல்லை.
இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்துக்கும் இரண்டு வருடங்களுக்கான மொத்தம் ஆறு அமர்வுகளுக்கு காலக்கெடு வழங்கப்படுவது வழக்கம். இந்த கால எல்லைக்குள் ஜெனிவாவின் பிரதான குழு (கோர் குழு) காட்டமான அறிக்கைகளை வெளியிடும். கனடா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இக்குழுவில் மாறி மாறி முக்கிய இடம் வகிப்பதால் இந்த அறிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த மாதம் 19ம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் ஆரம்பமானது. இது யூலை 11ம் திகதிவரை தொடரும். இந்த அமர்வின்போது இலங்கை மீது புதிதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்பட மாட்டாது. ஆனால் முன்னைய இறுதித் தீர்மானத்தையொட்டிய கரிசனைகளும் அபிப்பிராயங்களும் எதிர்பார்ப்புகளும் அறிக்கைகளாக முன்வைக்கப்படும்.
முதல் நாள் அமர்வில் பேரவையின் தலைவரான வொல்கர் டேர்க் தமது உரையில், மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்து வருவதையிட்டு கவலையை வெளிப்படுத்தினார். ஜெனிவா அமர்வுகளில் கவலை, அனுதாபம், விசனம் என்ற சொற்களை தொடர்ந்து கேட்டுகேட்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அவ்வார்த்தைகளில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்போதிருக்கும் நிலைமையில் இதற்கும் மேலாக ஜெனிவாவால் எதனையும் செய்ய முடியாதிருப்பதால் இந்தச் சொற்பதங்களை பாவிப்பதுடன், இலங்கை அரசாங்கத்தின் மீது பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை ஜெனிவா பேரவை வலியுறுத்துகின்றது என்று கூறி முடித்து வைப்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் ஆணைப்படி கடந்த பத்து வருட காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உத்தியோத்தர்கள் நேரடியாகப் பெற்ற தகவல்களையும் தரவுகளையும் உள்ளடக்கியதான பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென வோல்கர் டேர்க் தமது அறிக்கையில் வேண்டியுள்ளார்.
இதுவெல்லாம் கேட்டுப் புளித்துப்போன அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.
மூன்றாம் நாள் அமர்வு 21ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றவேளை இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை பேரவையின் பதில் உயர் ஸ்தானிகர் நடா அல் ந~Pஃப் சமர்ப்பித்தார். இலங்கை அரசு தொடர்ந்தும் தனது பொறுப்புக் கூறலை தாமதப்படுத்தி வந்தால், பல தடைகளை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரித்ததை இங்கே முக்கியமாகக் குறிப்பிடலாம். சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறை இதில் அடங்கலாமென அவரால் சுட்டிக்காட்டப்பட்டது.
மிகவும் மோசமான முறையிலான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் மனித உரிமை பேரவையிடம் உண்டு என்பதை மறைமொழியில் சுட்டிக்காட்டிய இவர், அதன் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாமென்று நேரடியாக கூறியுள்ளார்.
ஏற்கனவே இராணுவ உயர் அதிகாரியான சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதியாகவிருந்த வசந்த கரணகொட உட்பட நான்கு படைத்துறையினருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்ததும், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்சவோடு மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு கனடிய அரசு பயணத்தடை விதித்ததும், நடா அல் ந~Pஃப் அவர்களின் எச்சரிக்கை ஊடாக நினைவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையின் முன்னாள் படைத்துறை அதிகாரிகள் பலரை இலங்கை அரசு கனடாவுக்கு தூதுவர்களாக நியமித்தபோது அவர்களை கனடா நிராகரித்ததால், அரச பதவிகள் எதுவும் வகிக்காத ஒருவரையே இறுதியாக இலங்கை அரசு நியமிக்க நேர்ந்ததையும் இங்கு கவனிக்கலாம்.
1978ல் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன பயங்கரவாத தடைச்சட்டத்தை குறுகிய காலத்துக்கானதாக அமலாக்கினார். தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்துக்கு சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் ஏகோபித்து ஆதரவு வழங்கினர். இந்தச் சட்டம் இன்றுவரை தொடர்கிறது. சர்வதேசத்தின் நெருக்குவாரம் காரணமாக இதனை நீக்குவதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தாராயினும் அது இதுவரை நடைபெறவில்லை.
இதற்குப் பதிலாக பிரித்தானியாவில் இருப்பது போன்ற பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் கொண்டுவரப்படுமென தெரிவித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, புதிதாக ஒன்றை தயாரித்து சில வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்தார். புதிய தயாரிப்பு முன்னையதைவிட மோசமானதென சிங்கள அரசியல் கட்சிகளே கடுமையாக எதிர்த்ததால் அதனை எதிர்பார்த்தவாறு ரணில் அரசினால் நிறைவேற்ற முடியாது போயிற்று.
அமைதி முறையிலான போராட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமை, தொழிலாளர் நலன் பேணும் உரிமை என்பவைகளைக்கூட மட்டுப்படுத்தும் அல்லது நசுக்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறி சிங்களத் தரப்புகள் இதனை எதிர்த்தன.
இதனை தமது அறிக்கையில் அடையாளப்படுத்திய நடா அல் ந~Pஃப் அவர்கள், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென்றும், அதனை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார். இதனைக்கூட ரணில் அரசு காதில் போட்டுக் கொள்ளாது என்று நிச்சயமாகக் கூறலாம்.
மைத்திரி - ரணில் நல்லாட்சி(?) அரசு அப்போது அமெரிக்கா முன்மொழிந்த பொறுப்புக்கூறல் விசாரணைக்கு இணைஅனுசரணை வழங்கியதை மறந்துவிட முடியாது. ராஜபக்சக்களை முறையாகக் காட்டிக்கொடுத்து மாட்டி விடவே நல்லாட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்து இணைஅனுசரணை வழங்கப்பட்டது.
ஆனால், இன்று ராஜபக்சக்களின் அனுசரணையில் - அவர்களது பெரமுனவின் பெரும்பான்மையில் ஜனாதிபதியானதால் அன்றைய இணைஅனுசரணையை ரணில் தலைமையிலான அரசு இன்று மீளப்பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்கா முன்மொழிந்த தீர்மான நடைமுறையை மறுதலித்தும் வருகிறது.
இலங்கையில் அவ்வப்போது நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களின் கேவலத்தையும் நடா அல் ந~Pஃப் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 'இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளன" என்று குறிப்பிட்ட இவர், காணாமல்போனோர் விடயத்துக்காக நியமிக்கப்பட்ட அலுவலகமும் பாதிக்கப்பட்ட தரப்பினரை திருப்திப்படுத்தவில்லையென்று விரல் நீட்டியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை முன்னெடுத்துள்ள நடவடிக்கை அக்கட்டமைப்பின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டுமென இவர் தெரிவித்துள்ளதானது, அதன் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது.
கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷகோர் குரூப்| இலங்கையில் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான எதிர்ப்பை கவலையாக வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளுக்கு கட்டியம் கூறுவதாக 53வது அமர்வின் அறிக்கைகள் காணப்படினும், இதனையிட்டு இலங்கை அரசு வழமைபோல அலட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் தவிர்த்துச் செல்லும் போக்கே காணப்படுகிறது. இதனையிட்டு தொடர்ந்து ஜெனிவா கவலைதான் கொள்ளும் என்றால், அதனால் யாருக்கு என்ன பயன்?
Post a Comment