குருந்தூர்மலை:3மாத விடுமுறை!



குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணப்பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலும் மூன்று மாதங்களிற்கு பின்போடப்பட்டுள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக பௌத்ததேரர்களால் தொடரப்பட்ட வழக்கே எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கானது நேற்று  (08)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், கடந்த 2022 ஜீன் மாதம்  முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிகள் நடந்திருந்தன.

பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன்; உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வழக்குடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் அடுத்த தவணையின்போது மன்றில் முன்னிலையாகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


No comments