புளொட் கொலையாளிக்கு மரணதண்டனை

 


இலங்கை புலனாய்வு பிரிவின் முகவராக வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தமிழீழ மக்கள் விடுதலைக்கழக முக்கியஸ்தர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்தவகையில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது.

வவுனியாவைச் சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்திருந்தது.

இன்றையதினம் தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments