முன்னாள் போராளிகளை பிடித்து கொடுக்கின்றது இந்தியா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கைது செய்து இலங்கை ; அரசிடம் இந்திய அரசு கையளிக்க மீண்டும் முற்பட்டுள்ளது.

அவ்வகையில் முன்னாள் போராளிகளுள் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன்,இந்தியாவில் கைதாகி இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

புலிகள் அமைப்பு தொடர்பில் இலங்கை படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் ஒருவருடனேயே அவர் தப்பியோடியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்விருவரும்; புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.


No comments