தனியார் வகுப்புக்களை நிறுத்துவதை மீள் பரிசீலனை செய்ய கோரிக்கை


வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடைவிதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யாழ் வணிகர் கழகம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் எழு நாட்களும் தனியார் கல்வி நிலையங்களினால் நடத்தப்படும் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை தரம் 9 க்கு உட்பட்ட மாணவர்களுக்கு யூலை 1ம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நிறுத்துவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் யாழ் வணிகர் கழகம், மாவட்ட செயலாளருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடைவிதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது தற்போதைய காலகட்டத்தில் பொருத்தமற்றதாக அமையுமென நாம் கருதுகிறோம். அதற்கான சில விபரமான காரணங்களை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

1) கடந்த போர் காரணமாக தமிழ் மக்களினுடைய கல்வித்தரம் வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது இலங்கையில் மாகாண அடிப்படையில் எமது மாகாணம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 8 அல்லது 9வது நிலையில் உள்ளது. அதனை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது..

2) கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட முடக்கநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாடசாலைகளில் பாடத்திட்டம் (Syllabus) முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன் வழமையாக நடைபெறும் பரீட்சைகளும் பின் தள்ளப்பட்டுச்செல்கிறது. மேலும் கூடுதலாக தனியார் கல்வி நிலையங்களிலே இப்பாடத்திட்டங்கள் (Syllabus) முடிந்தளவு கவனத்தில் எடுத்து கற்பிக்கப்படுகின்றது.

3) தொழில் நிமித்தம் வேலைக்குச் செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் கல்விக்காக சனி, ஞாயிறு தினங்களையே தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட்டிச்செல்வது பொருத்தமாக அமையுமென கருதுகின்றனர்.

4) வெள்ளி,ஞாயிறு தினங்களில் மதவழிபாடு, அறநெறி கற்றல் என்பது கட்டாயமாக்கப்பட்டதாக காணப்படவில்லை, மாணவர்கள் மதவழிபாடு, அறநெறிக்குச் செல்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

5) மேலும் இந்த தடைவிதிக்கப்பட்ட காலங்களில் இடைவிலகிய மாணவர்களுடன் இவர்களும் இணைந்து பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அத்துடன் சமூக சீர்கேடுகளில் இவர்கள் விடுமுறை நாட்களில் சமூகத்தில் இருக்கும் சில இணையும் வாய்ப்புக்கள் அதிகம் ஏற்படலாம்.

(6) ஏழை, நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் தனியார் பயிற்சிக் கல்வி வெள்ளி, ஞாயிறு தினங்களில் தடைசெய்யப்பட்டால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்படும். அதேவேளை வசதி படைத்த மாணவர்கள் Personal வகுப்புக்களுக்குச் சென்று பயனடைவர்.

7) பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே தனியார் கல்வி நிலையங்களிலும் வகுப்புக்களை நடாத்துவதால் அவர்களுக்கு விடுமுறை நாட்கள் வசதியாக அமையும்.

8) இந்த தடைஅமுலுக்கு வருமாக இருந்தால் கல்விச்செயற்பாடுகள் மேலும் பின்னடைவு ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளது. அத்துடன் எமது செயற்பாடுகள் பின்நோக்கிச் செல்வதற்கு நாமே வாய்ப்பினை ஏற்படுத்தியவர்களாக விளங்குவோம்.

9) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை அரச அமைச்சரவையில் அப்போதிருந்த கல்வியமைச்சரால் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் தடைசெய்ய வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அமைச்சரவையில் பாரிய எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த விடயம் கைவிடப்பட்டதாக நாம் அறிகிறோம்.

மேலும், இலங்கையில் எந்த மாகாணத்திலும் இப்படியான நடைமுறைகள் இல்லாத போது நாம் மட்டும் இதை ஏற்படுத்தி எமது மாகாணக் கல்விப் பின்னடைவுக்கு - வழிவகுப்பதாக அமையும் என்று நாம் கருதுகிறோம்.

ஆகவே மேற்குறிப்பிட்ட ஒன்பது விடயங்களை தங்கள் கவனத்தில் எடுத்து தாங்கள் மேற்கொண்ட தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்து கல்விச்செயற்பாடுகளுக்கு எந்த வித தடைகளையும் ஏற்படுத்தாது கல்வி வளர்ச்சிக்கு தாங்கள் பூரண ஆதரவினை வழங்கியுதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அதே வேளை தனியார்கல்வி நிலையங்களில், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், மாணவர்களுக்கு சமய சம்பந்தமாகவும், ஒழுக்கக்கல்வி, மற்றும் சமூகம் சம்பந்தமாகவும் 15நிமிடம் தொடக்கம் 30நிமிடம் வரை கற்பிக்க வேண்டும் என்று தாங்கள் எடுத்த தீர்மானத்தினை நாம் வரவேற்கின்றோம் - என்றுள்ளது.

No comments