அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிக்கப் புதிய திட்டம்


இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக கணினி செயலிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு முன்மொழிந்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது, “குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமனம், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐ.எம்.எப். ஒப்பந்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா அதற்கமைய எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் முன்னர் குழுக்களில் குறைந்தது ஒரு வாரமாவது ஆராய்ந்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுடன் முன்வைக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலக வங்கி உதவியின் கீழ் இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ நிதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், அரச நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான கணினி செயலிகளை உருவாக்குவது தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்டது.

அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான டிஜிட்டல் மேம்பாட்டு முகவர் நிறுவனத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments