தீர்வைப் பற்றி பேசிக்கொண்டேயிருப்பது ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தராது! பனங்காட்டான்


11ம் திகதி சந்திப்பின்போது பிரிந்தவர் கூடினர், ஒன்றாயிருந்து பேசினர், பின்னர் கலைந்தனர். ரணிலின் ஓரங்க நாடகம் அற்புதமாக அரங்கேறியது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான 12ம் திகதிய சந்திப்பு 15ம் திகதிக்கு மாற்றப்பட்டுவிட்டது. அடுத்த நாடக ஒத்திகைக்கு இரண்டு  நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது போலும். 

கடந்த வருடம் மே மாதம் 12ம் திகதி நல்வாய்ப்பினால் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அதன் முதலாவது ஆண்டு பூர்த்தி நாளான இந்த மாதம் 12ம் திகதி இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக தமிழர் தரப்புடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் பின்போடப்பட்டுள்ளது. 

ரணிலின் பிரதமர் பதவியேற்பு நினைவுப் பரிசாக தமிழர்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது நியதிபோலும். இதற்கு முதல் நாளான மே மாதம் 11ம் திகதி தமிழர் தரப்புடன் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் செல்வராஜா மற்றும் கிழக்கு மாகாண வியாழேந்திரன் ஆகிய மூவர் தவிர வடக்கு கிழக்கின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அரசியல் பேதமின்றி இதில் பங்குபற்றினர். 

தமிழர் தாயகக் காணிகள் தொடர்பான பிரச்சனை, படையினரின் ஆக்கிரமிப்பு, தொல்பொருள் திணைக்கள அத்துமீறல்கள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்ட முன்னெடுப்பு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகிய விடயங்கள் குறித்து இப்பேச்சுவார்த்தையில் அலசப்பட்டது. 

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியான தகவல்கள் அரைகுறையாகவும் தெளிவற்றவையாகவுமே இதுவரை வெளிவந்துள்ளன. ஜனாதிபதி செயலகமும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழ் தேசிய தரப்புகளும் அதிகாரபூர்வமாக அறிக்கைகள் எதனையும் இதனை எழுதும்வரை வெளியிடவில்லை. 

கொழும்பைத் தளமாகக் கொண்ட தினசரி ஒன்றின் முன்பக்க பிரதான செய்தியின் தலைப்பு, 'பேச்சில் உருப்படியான முடிவுகள் இல்லை" என்ற கொட்டை எழுத்தின் கீழே, 'பார்க்கிறேன், ஆராய்கிறேன், பரிசீலிக்கிறேன்" என்றே ஜனாதிபதி பதிலளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரு தரப்புக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரணில் எவ்வாறு நடந்து கொள்வாரென்பது ஓரளவுக்கு எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதுவே நடந்திருக்கிறது. தமிழக முதலமைச்சராகவிருந்த காமராஜர் எதற்கெடுத்தாலும் 'ஆகட்டும் பார்க்கலாம்" என்று பதிலளிக்கும் பாணியில்தான் ரணிலும் உள்ளாரென்பதை இங்கு சுட்ட வேண்டியதில்லை. 

11ம் திகதிய பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தைப் பெற்றது காணி விவகாரம். தமிழரின் பாரம்பரிய காணிகளை அடையாளமிழக்கச் செய்து குடிப்பரம்பலை மாற்றியமைக்க அரச தரப்பினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடாகவே இது தொடர்ந்து அமைந்து வருகிறது. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தமது முதலாவது அமைச்சரவையில் தமது புதல்வரான டட்லி சேனநாயக்கவை காணி - விவசாய அமைச்சராக நியமித்ததுடன், இதற்குத் தேவையான பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கு பொறுப்பான நிதியமைச்சராக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை நியமித்தார். தற்செயலான ஒன்றாக இதனை பார்க்கக்கூடாது. இதே அரசாங்கத்தில் அப்போது உள்;ராட்சி அமைச்சராக எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அங்கம் வகித்தார் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்து வைத்த தமிழ் மண் சூறையாடல் 75 ஆண்டுகளாக குரங்கு வால்போல் நீண்டு கொண்டே வருகிறது. இக்காலத்துள் சிங்களப் படையினர் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ராணுவ முகாம்களை அமைக்க காணிகளை அபகரித்தனர். அவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வசதி, அவர்களின் வழிபாட்டுக்கான விகாரைகள் அமைப்பு, அவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகள் விளையாட்டு மைதானங்கள் உருவாக்குவதற்கென இன்னொரு புறத்தில் காணிகள் பறிக்கப்பட்டன. தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் செயல்களால் தமிழரின் மத வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்படும் தடைகளும் குறுக்கீடுகளும் அழிப்புகளும் இன்னொரு புறத்தில். இவை போதாதென்று மகாவலி வலய விஸ்தரிப்பினால் உருவாக்கப்படும் சிங்கள பௌத்த குடியேற்றங்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் காணிகள் கொள்ளையடிப்பதுபோல் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. 

இந்நடவடிக்கைகளை அரசாங்க உயர்மட்டம் - ஜனாதிபதிவரை தங்களுக்குத் தெரியாதது போன்று நாடகம் ஆடினாலும் சகலதும் அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனும் அனுசரணையுடனுமே நடந்து வருகின்றன. 

11ம் திகதி சந்திப்பில் இவ்விவகாரம் தமிழர் தரப்பால் இறுக்கமாக கையாளப்பட்டது. போதிய ஆதாரங்களை ஆவணங்களாக முன்வைத்து விலாவாரியாக விளங்கப்படுத்தப்பட்டது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டதால் வழக்குத் தொடுனர்களும் எதிரிகளும் நீதிமன்றத்தில் நேரடியாக சந்திப்பது போன்ற சூழலும் ஏற்பட்டது. 

போர் காரணமாக முப்பது வருடங்களாக வடக்கிலும் கிழக்கிலும் தொல்பொருள் திணைக்களம் செயற்படவில்லையென்றும், இப்போது இப்பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் அரசாங்கம் இங்கு மட்டும் செயற்படுகிறதென காட்சி கொடுப்பதாக திணைக்கள தலைமை அதிகாரி அநுர மனதுங்க தெரிவித்த கருத்து சப்பைக்கட்டாக அமைந்தது. இவரது விளக்கத்தின்படி பார்க்கையில், தற்போது தொல்பொருள் திணைக்களம் தமிழர் பிரதேசங்களில் மண்ணைக் கிண்டுவது போலவும் அங்கு சிங்கள பௌத்த சின்னங்கள் காணப்படுவது போலவும் இருக்கிறது. 

தொல்பொருள் திணைக்களம் இப்பணிகளை மேற்கொள்ள எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்ற அவரது கேள்விக்கான பதில் அதிர்ச்சி தருவதாக இருந்தது. பொதுமக்களுக்கு உணவும் உரமும் எரிபொருளும் வழங்குவதற்கு நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு எவ்வாறு நிதி வழங்குகிறது என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மனதுங்கவின் பதில் இருந்தது. கிடைக்கும் நன்கொடைகளாலும், சில நிறுவனங்களின் பங்களிப்பாலும், பௌத்த தேரர்கள் வழங்கும் நிதியினாலுமே இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மனதுங்க தெரிவித்தது அரசாங்கத்தை இவ்விடயத்தில் காப்பாற்றுவதுபோல இருந்தது. ஆனால் அதுவே ரணிலுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

பௌத்த மத முறையின்படி தினமும் ஒருவேளை உணவை மட்டுமே தேரர்கள் உண்ண வேண்டுமென்பதும், அதுவும் பிச்சாபாத்திரம் ஏந்தியே பெற வேண்டுமென்பதும் நடைமுறை. ஆனால், பௌத்த தேரர்கள் தொல்பொருள் திணைக்கள பணிகளுக்கு நிதி வழங்குகிறார்கள் என்பதை எவ்வாறு நம்ப முடியும்? இதனை நம்ப வேண்டுமானால் நிதி வழங்கிய பௌத்த தேரர்களின் விபரங்களும், நிதித் தொகையும் பகிரங்கப்படுத்த வேண்டும். 

அரசாங்கமே மறைமுகமாக வழங்கும் நிதி தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தொல்பொருள் திணைக்கள அதிகாரி அப்பட்டமாக பொய் அவிழ்த்துள்ளார். பௌத்த தேரர்களும் நன்கொடையாளர்களும் தொல்பொருள் பணிகளுக்கு நிதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த ரணில், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படாத நிதி எதனையும் பயன்படுத்தக்கூடாதென திணைக்கள அதிகாரிக்கு தமிழர் தரப்பினருக்கு முன்னால் அறிவுரை வழங்கியதை என்னென்று சொல்லலாம். இதுதான் 11ம் திகதிய நாடகத்தின் கிளைமாக்ஸ் எனலாம். 

தனிநபர்கள் எவரது நிதியையும் வடக்கின் பணிகளுக்கு தொல்பொருள் திணைக்களம் பயன்படுத்தக்கூடாதென ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உத்தரவிட்டதாக வெளியான செய்திகள், அவரது நேர்மையான வழிகாட்டலுக்கு ஒரு நல்லுதாரணம் என சிலர் மெச்சக்கூடும். தொல்பொருள் திணைக்களத்துக்கு அவர் விடுத்த இந்த உத்தரவே எதிர்காலத்தில் தமிழர் பகுதிகளில் தமிழர் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கும் பொருத்தமானது என விடுக்கப்பட்ட  முன்னெச்சரிக்கை என்பதை எம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இதைப் புரிந்து கொள்வதானால், தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்திய நிலம் ஒன்றில் எவரும் எந்தக் கட்டிடமும் அமைக்க முடியாதென்றும், அரசுக்குச் சொந்தமான அந்த இடத்தில் எவராவது தங்கள் இஸ்டப்படி செயற்படும் பட்சத்தில், அல்லது ஏதாவது தீர்மானங்களை மேற்கொள்ளும் வேளையில் காவற்துறை ஊடாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்ததை, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஒவ்வொரு தமிழர் பிரதிநிதியும் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். 

11ம் திகதி சந்திப்பில் காணி விவகாரத்தில் ரணில் எடுத்த சில முடிவுகள் வெளித்தோற்றத்தில் தமி;ழர் தரப்புக்கு அனுகூலமாக - அரச திணைக்கள அதிகாரிகளை கட்டுப்படுத்துவது போன்று காணப்பட்டாலும் அது வெறும் வார்த்தைஜாலம் மட்டுமே. 

கோதபாய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தமிழர் தரப்புடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியது ஞாபகம் இருக்கலாம். தமிழர்கள் பிரதேசங்களில் காணிகளை படையினர் சுவீகரிப்பது, தனியார் காணிகளை அடாத்தாக கைப்பற்றுவது, பௌத்த விகாரைகளை தம்மிஸ்டப்படி நிர்மாணிப்பது போன்றவை பற்றி தமிழர் தரப்பினர் சுட்டிக்காட்டியபோது, இவை எதுவுமே தமக்கு தெரியாதது போன்று அதிர்ச்சி கலந்த வியப்பை வெளிப்படுத்திய கோதபாய, ராணுவத்துக்கு எதற்காக அங்கு காணி வேண்டுமென்று வினா தொடுத்ததோடு நிற்காது, தொலைபேசியில் ராணுவ உயர் தளபதி சவேந்திர சில்வாவை அழைத்து நேரடியாக வினவினார். 

அத்துடன் நிற்காது, சவேந்திர சில்வாவை சந்தித்து இது தொடர்பான ஆவணங்களை கையளிக்குமாறும் சுமந்திரனிடம் கோதபாய தெரிவித்தார். சுமந்திரன் அவ்வாறு உரிய ஆவணங்களை சவேந்திர சில்வாவிடம் வழங்கினாரா? அதன் பின்னர் என்ன நடந்தது? இவை எதுவும் எவருக்கும் தெரியாது. 

இன்று அதே கோதபாய பாணியில் நவீன ஓரங்க நாடகத்தை அற்புதமாக அரங்கேற்றியுள்ளார் ரணில். ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதே யதார்த்தம். 12ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை 15ம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் திகதிய கூட்டம் போன்று இன்னுமொரு நாடகம் அங்கு அரங்கேறுமா என்பதை அடுத்த வாரம் தெரிந்து கொள்ள முடியும். 

இவ்வேளையில் கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வைத்து தமிழர் தரப்பினரை நேரடியாகச் சந்தித்த போது தெரிவித்த கருத்து மீள்நினைவுக்கு உட்படுத்தப்பட வேண்டியது. 

சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரை ஒரே சமயத்தில் ஒன்றாக அழைத்து முதன்முறையாக ஜெய்சங்கர் நடத்திய கலந்துரையாடல் இது. 

'இப்போதிருக்கும் அதிகாரப் பகிர்வு விடயங்களை இடைக்காலத் தீர்வாக அமல்படுத்தாது போனால், கிடைப்பதும் இல்லாது போகும்" என்று இவர்களுக்கு உபதேசம் செய்த அமைச்சர் ஜெய்சங்கர் இறுதியாக, 'தீர்வைப் பற்றி பேசிக்கொண்டேயிருப்பது ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தராது" என்று எடுத்துக் கூறினார். இந்தியாவின் அரசியல் மந்திரம் இதுவே என்பதை தமிழ்த் தேசிய தலைமைகள் புரிந்து கொள்வார்களாக!

No comments