கௌபீசணம் இல்லாததை மறந்து வேட்டியைக் கழற்றினால் என்னாகும்? பனங்காட்டான்


இலங்கையின் இனப்படுகொலையையும் இனவாத, மதவாத நடவடிக்கைகளையும் விமர்சித்து கனடிய பிரதமர் ரூடோ விடுத்த அறிக்கையை சிங்கள மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாதென்பதற்காக கொழும்பின் பிரதான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஆனால், விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற இனவாதிகள் ரூடோவைக் கண்டித்து விடுத்த அறிக்கைகளுக்கு அதிமுக்கிய இடமளிக்கப்பட்டதால் ரூடோவின் அறிக்கை ஊடாக சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன என்பது அம்பலமாகியுள்ளது.
 

இலங்கையின் இப்பிரச்சனைக்கு எழுபது வயதாகிறது. சிங்களவர் ஆளும் இனமாகவும், தமிழர் ஆளப்படும் இனமாகவும் எழுதாத சட்டத்தை முன்வைத்து உருவான நடைமுறையே இனவாதத்தின் தோற்றுவாய். 

தமிழருக்கு எதிரான இனவாதத்தின் பெற்றோராக இலங்கையை ஆட்சி புரிந்த - புரியும் அனைத்து சிங்களக் கட்சிகளின் தலைவர்களையும் குறிப்பிடலாம். தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், தனிச்சிங்கள சட்ட அமுலாக்கம், களனிப் பாதயாத்திரை, பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் என்று ஆரம்பமான இனவாதம் முள்ளிவாய்க்காலில் முடிந்துவிடவில்லை. 

ஜெனிவாவில் பல தீர்மானங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதாயினும் அவற்றை முறியடித்து வந்த சிங்கள ஆட்சி பீடங்கள், சர்வதேசத்தை நிராகரித்து தம்மி~;டப்படி தமிழரை அடக்கியாளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. 

இதனால் போர்க்கால படைத்துறை அதிகாரிகளுக்கான பயணத்தடை, போரை வழிநடத்திய அரசியல் தலைவர்கள் மீதான தடை என்பவற்றோடு காரியங்கள் நின்றுவிடவில்லை. சில நாடுகளில் இனப்படுகொலையை முன்னிறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்விடயத்தில், அரசியல் கட்சி வேறுபாடின்றி கனடிய அரசாங்கங்கள் நிறைவேற்றும் பிரேரணைகள் கவனத்துக்குரியவை. 

கனடாவின் பிரதான மாகாணமாக விளங்குவது ஒன்ராறியோ. கனடாவில் வாழும் சுமார் மூன்று லட்சம் தமிழரில் எழுபது வீதத்துக்கும் அதிகமானவர்கள் இங்குதான் உள்ளனர். ஒன்ராறியோh மாகாண சட்டமன்றத்தில் தேர்தல் மூலம் தெரிவான இரண்டு தமிழர் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். 

ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் ஒரு பிரேரணை அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை பெற்று நிறைவேறி சட்டமாகியது. இப்பிரேரணையை முன்மொழிந்தவர் ஸ்காபரோ - றூஜ்பார்க் தொகுதி மக்கள் பிரதிநிதி விஜய் தணிகாசலம். மே மாதம் 18ம் திகதிக்கு முன்னரான ஒரு வாரத்தை தமிழின அழிப்பு கல்வி வாரமாக இச்சட்டம் பிரகடனம் செய்துள்ளது. 

இலங்கை அரசின் சகல வளங்களையும் பெற்று இயங்கும் அவர்களின் ஆதரவாளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து ஒன்ராறியோ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர் சிங்களத் தரப்பினர். எவ்வாறாவது தமிழின அழிப்பு என்பதை ஒன்ராறியோ சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட வேண்டுமென்பதே இவர்களது குறிக்கோள். இதற்கான மேன்முறையீட்டுச் செலவுக்கு சிங்கள தேசமே நிதி வழங்குவது மறைப்புக்கு அப்பாற்பட்டது. 

மாகாண மட்டத்திலான இனஅழிப்புச் சட்டத்தை எதிர்த்து சிங்கள தேசம் போராடிக் கொண்டிருக்கையில் கடந்த வருடம் (2022) கனடிய மத்திய நாடாளுமன்றம் ஒரு மனதாக  பிரேரணையொன்றை நிறைவேற்றியது. 'ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ம் திகதியை தமிழின அழிப்பு நாளாக நினைவு கொள்வதை இந்தச் சபை ஏற்றுக்கொள்கிறது" என்று இப்பிரேரணை வாசகம் அமைந்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் ஜனவரி மாதம் பத்தாம் திகதி கனடிய அரசு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச உள்பட நால்வருக்கு பயணத்தடையை விதித்தது. மகிந்தவும் கோதபாயவும் மனிதகுலத்துக்கு எதிரான போரை இறுதிவரை வழிநடத்தியவர்கள். 

அமெரிக்கா ஏற்கனவே ராணுவத்தளபதி சவேந்திர சில்;வாவுக்கும் மேலும் சில படைத்தளபதிகளுக்கும் பயணத்தடை விதித்தது. கடற்படைத் தளபதியாகவிருந்த வசந்த கரணகொடவுக்கு சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தடை விதித்தது. அமெரிக்க தடைகளுக்கு எதிராக இலங்கை அரசு எதனையும் செய்ய முடியாதுள்ளது. ஆனால், தடை விதிக்கப்பட்ட சவேந்திர சில்வாவும், வசந்த கரணகொடவும் தாங்களோ தங்கள் குடும்பத்தினரோ அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லையென்று தெரிவித்து, தங்கள் மீதான தடையை அர்த்தமற்றது என்பதுபோல் காட்டி தங்களை கதாநாயகர்களாக காட்சி கொடுக்க முனைந்துள்ளனர். 

ஆனால், கனடிய பிரதமர் இனப்படுகொலையை சுட்டி விடுத்த முள்ளிவாய்;க்கால் 18 அறிக்கை சிங்கள தேசத்தை சற்று அசைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அவரது வழமையான பாணியில் எதுவுமே தெரியாததுபோல (புரியாதவர்போல அல்ல) தம்மைக் காட்டுகிறார். பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ரணில் பாணியில்தான். 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தமக்கான ஒரு கடமையாக இலங்கையிலுள்ள கனடிய தூதுவரை அழைத்து இலங்கை அரசின் அதிருப்தியை தெரிவித்துள்ளார். புதுவருடப் பிறப்பு, கிறிஸ்மஸ், தீபாவளி கொண்டாட்ட நாட்களில் ஜனாதிபதி, பிரதமர், கட்சித் தலைவர்கள் விடுக்கும் வாழ்த்துச் செய்திகள் போன்ற மாமூலான ஒன்றுதான் அமைச்சர் அலி சப்றியின் அதிருப்தி அறிக்கை. 

கனடிய பிரதமர் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று குறிப்பிட்டுள்ளதால், இலங்கை முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கு அது தடையாக அமைவதாக அமைச்சர் அலி சப்றி குறிப்பிட்டிருப்பது வேடிக்கையான விடயம். பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை என அனைத்தையுமே இலங்கை தொடர்ந்து நிராகரித்து வருவதாலேயே ஜெனிவா அடுத்தடுத்து இலங்கை மீது தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. இவ்விடயத்தில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் மிக முக்கியமானது கனடா. 

'இலங்கையில் எதிர்வரும் ஆண்டுகளில் சமாதானத்தையும் மீளிணக்கத்தையும் அடைவதற்கு இன்றியமையாத அம்சங்களான மதம், நம்பிக்கை, பன்மையியல் ஆகியவற்றின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் கனடா உலக நாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளது" என்ற கனடியப் பிரதமரின் அறிக்கையின் வாசகத்தை அமைச்சர் அலி சப்றி கவனித்திருந்தால், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ரூடோவின் அறிக்கை தடையாக அமையுமென்று குறிப்பிட்டிருக்கமாட்டார். 

கனடிய பிரதமரின் அறிக்கைக்கெதிராக கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்தின் முன்னால் சிறுதொகையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரான விமல் வீரவன்ச தமது பங்குக்கு ஒன்றை கூறியுள்ளார்: கனடாவில் பூர்வீக குடிமக்களை இனப்படுகொலை செய்த நாள் ஜுன் 21ம் திகதி. அன்றைய நாள் கனடிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் (கொழும்பிலா அல்லது கனடாவிலா என்று குறிப்பிடவில்லை). 

'கனடா மிகப்பெரிய நாடு. அங்கு போதிய நிலவசதி உண்டு. எனவே தமிழருக்கு அங்கு ஓர் ஈழத்தை அமைத்துக் கொடுக்கலாம்" என்று பிரதமர் ரூடோவுக்கு இலவச ஆலோசனை வழங்கியுள்ளார் முன்னாள் கடற்படை அதிகாரியும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர. 

கனடாவில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பூர்வீக குடிகளுக்கு எதிரான இனரீதியான தாக்குதல்களுக்கு பிரதமர் ரூடோ பல தடவை பகிரங்க மன்னிப்பு கோரியதும், அவர்களின் புனர்வாழ்வுக்காக கோடிக்கணக்கான டாலர்களை ஒதுக்கி வருவதையும் விமல் வீரவன்சவும், சரத் வீரசேகரவும் அறியாதிருப்பது வெட்கக்கேடானது. 

இனவாதத்தை ஊட்டி வளர்த்து அதிலிருந்து விடுபட முடியாதுள்ள இலங்கை இப்போது மதவாதத்தையும் இணைத்து ஊதி வளர்த்து வருகிறது. இவ்வாறான தொடர் செயற்பாடுகளை கண்டித்த கனடியப் பிரதமர் அறிக்கையை இலங்கையில் வாழும் சிங்கள மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இதனை கொழும்பின் பிரதான ஊடகங்கள் மறைத்தன. ஆனால், விமர் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோரின் ரூடோவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, சர்வதேசம் இலங்கையை எவ்வாறு பார்க்கின்றது என்பதை அப்பட்டமாக தெரியப்படுத்தியுள்ளன. 

ஏற்கனவே, கௌபீசணத்தை இழந்து நிற்பவர் அதனை மறந்து வேட்டியைக் கழற்றினால் என்னாகும்?

No comments