தாயகமெங்கும் நினைவேந்தல்!



வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர் பெற்றோரினால் முள்ளிவாய்க்கால் நினைவுப் பொதுச் சுடரேற்றப்பட்டதுடன், வருகைதந்தோரினால் சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக நிகழ்வுகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் அவலங்களைக் காட்சிப்படுத்தும் பதாதைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில்  தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் , முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(17) முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


No comments