கேரளாவில் படகு விபத்து - 22 பேர் உயிரிழப்பு


கேரள மாநிலம் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதனாலும், வைத்தியசாலையில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதனாலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. 

இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.

அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில், அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

அவ்வாறு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகொன்று, கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும், தத்தளித்தபடி, கடலில் கவிழ்ந்தது. 

அதனை அடுத்து,போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

அதிக பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

No comments