யாழில். மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு


மழைக்குள் நனைந்த ஆட்டுக்குட்டிகளை இடமாற்ற முற்பட்ட வேளை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்ணதாசன் ராகுலன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான். 

மாணவனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு நேற்றைய தினம் சனிக்கிழமை குட்டி ஈன்றுள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் இரவு முழுவதும் யாழில் கடும் மழை பெய்தமையால் , ஆட்டு குட்டிகள் குளிரினால் கத்திய வண்ணமே இருந்துள்ளது. 

அதனால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாணவன் குட்டிகளை இடம்மாற்ற முனைந்த போது , ஆட்டு கொட்டிலுக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த மின் குமிழுக்கு சென்ற வயரில் மின் ஒழுக்கு ஏற்பட்டு மாணவன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உள்ளான். 

மாணவனை பெற்றோர் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது , மாணவன் உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments