யாழில். நபர் ஒருவரை தாக்கி ரிக்ரொக்கில் காணொளி வெளியிட்ட 08 பேர் கொண்ட கும்பல் கைது




யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து ரிக்ரொக் செயலியில் வெளியிட்ட 08 பேர் கொண்ட கும்பல் ஒன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

வடமராட்சி , நெல்லியடி பகுதியை சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 08 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து , ரிக்ரொக் செயலியில் பதிவேற்றி உள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், தாக்குதலாளிகளை அடையாளம் கண்ட நிலையில் 08 பேரும் தலைமறைவாகி இருந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 08 பேரும் பதுங்கி இருந்த இடம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 08 பேரையும் கைது செய்துள்ளனர். 

குறித்த 08 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டு வருவதாகவும் , அந்த பணத்திற்காக கூலிப்படைகளாக யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

08 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments