தென்னிலங்கை குரங்குகளும் யாழ்ப்பாண தெருநாய்களும்! பனங்காட்டான்


ஒரு லட்சம் குரங்குகளை இலங்கை அரசு சீன நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது என்பதுவே இன்றைய நாட்களில் பரபரப்பான செய்தி. இதனால் ஒரு குரங்குக்கு 25,000 ரூபா வரை அரசுக்குக் கிடைக்குமாம். யாழ்ப்பாணத்தில் அறுபதுகளின் பிற்பகுதியில் தெரு (கட்டாக்காலி) நாய்களைப் பிடிப்பதற்கு சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவ்வாறு பிழைப்பு நடத்தினார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் குரங்கு பிடிப்பவர்களைக் கண்காணிக்க உதவும். தவறினால், குரங்கு பிடிப்பவர்களுக்கு நிகர லாபம்

இந்தப் பத்தியின் தலைப்பைப் பார்த்ததும் எவரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. ஆனால், இந்தத் தலைப்புக்குரிய விடயம் உண்மையானது. கடந்த காலத்தையும் வளரும் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் ஒரு சமாசாரம் இது. 

அந்த விடயத்துக்குள் போவதற்கு முன்னர் இலங்கையின் சமகாலப் போக்கினை நோக்குவது அவசியம். ஒரு விடயத்தை ஆரம்பித்துவிட்டு அதனை மக்கள் எதிர்க்க ஆரம்பிக்கையில், இன்னொரு பிரச்சனையை தொடக்கிவிட்டு அதன் பின்னால் மக்களை ஓடவைத்து பிரச்சனைகளுக்கூடாக தங்கள் காரியங்களை நிறைவேற்றுவதை ஒரு பயிற்சிக் களமாக ரணில் அரசு மேற்கொண்டு வருகிறது. 

கடந்த வருடம் ஜுலை 20ம் திகதி ஜனாதிபதியாகத் தெரிவான ரணில் விக்கிரமசிங்க கடந்த பத்து மாத ஆட்சிக்காலத்தில் இவ்வாறான பல அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்தி அனைவரையும் ஏமாற்றி வருகின்றார். இதனைப் புரிந்து கொண்டாலும் எதுவும் செய்ய முடியாதவர்களாக அரசியல் கட்சிகள் உள்ளன. 

இதற்கான மூலகாரணம், சகல அரசியல் கட்சிகளும் அரசியல் கூட்டுகளும் அரசியல் குழுக்களும் தங்களுக்குள் பிளவுபட்டு பிரிந்து நிற்பதே. இதுவும்கூட ரணிலின் கைங்கரியம்தான். 

தமது கட்சிக்காரர்கள் ஆட்சித்தரப்புக்கு பாய்ந்து செல்லாமல் தடுப்பதற்கு ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து தாஜா பண்ணுவதிலும், கூட்டாக இராப்போசன விருந்து வைப்பதிலும் சஜித் பிரேமதாசவின் காலம் போகிறது. போதாக்குறைக்கு இரண்டு பெண்மணிகள் - அவரது சகோதரியும் மனைவியும் கட்சி அரசியலுக்குள் தலையீடு செய்வதே கட்சியின் எம்.பிக்களை எரிச்சலடையச் செய்வதாக புகார் கிளம்பியுள்ளது. 

கோதபாய மற்றும் பசில் ஆகியோரின் எதேச்சாதிகாரப் போக்கினால் பெரமுனவின் கூட்டிலிருந்து வெளியேறியவர்களை தம்முடன் மீள இணைக்கும் முயற்சியில் வெற்றிபெற முடியாதவராக மகிந்த காணப்படுகிறார். முக்கியமாக இவர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில அணியினர் தங்களுக்குக் கொள்கைதான் முக்கியம் எனக்கூறி மகிந்த தலைமையில் இணைய மறுத்துள்ளனர். 

ஜி.எல்.பீரிஸ் - டலஸ் அழகப்பெரும அணியினர் தங்கள் எதிர்காலம் பற்றி நிச்சயமற்றவர்களாக அங்குமிங்கும் அலைந்து திரிகின்றனர். தமிழர் தேசிய பரப்புப் பற்றி சொல்லத் தேவையில்லை. உள்;ராட்சிச் சபைகளின் தேர்தல் இல்லாமற்போனதால் அவர்கள் அறிக்கைகளுடனும் குழுக்கூட்டங்களுடனும் ஆங்காங்கு தலைகாட்டுவதுடனும் காலத்தைப் போக்கும் நிலையிலுள்ளனர். 

இந்த மாதம் 25ம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த 340 உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெறாது என்று அதிகாரபூர்வமான அறிவித்தல் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது ரணில் விக்கிரமசிங்கவின் தனித்துவ தலைமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி எனலாம். 

8,325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 87,000 வரையான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் 13 கோடி 60 லட்சம் ரூபா அரசாங்க உண்டியலுக்குச் சென்றது. தேர்தல் இல்லையென்பதால் அந்தப் பணத்தை வேட்பாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென உதய கம்மன்பில கேட்டுள்ளார். ஆனால், அரச தரப்பிலிருந்து மௌனமே பதிலாக உள்ளது. 

இத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டிய இந்த மாதம் 25ம் திகதி ரணில் தரப்புக்கு முக்கியமான நாள். பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு தழுவிய ரீதியில் இன மத வேறுபாடற்ற வகையில் புதிய சட்டத்துக்கு எதிர்ப்புள்ளது. மனித உரிமைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள், அமெரிக்க தூதுவர் மற்றும் பௌத்த மகாசங்கங்களும் தங்கள் ஆட்சேபணையை வெளிப்படுத்தியுள்ளன. மக்களைப் பாதுகாக்கவே இப்புதிய சட்டமென்று விளக்கமளிக்கும் அரச தரப்பு, மக்கள் இதனை விரும்பவில்லையென்றால் முன்னைய பயங்கரவாத சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமென்று கூறி அச்சுறுத்துகின்றது. இதுதான் ரணில் பாணி அரசியல் என்பது. 

இந்த மாதம் 25ம் திகதி சர்வதேச நாணய வங்கியுடன் இலங்கை அரசு செய்த உடன்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். எவ்வகையிலாவது இதனை நிறைவேற்றுவது அரசின் இலக்கு. இதற்காக 3 நாட்களுக்கு தொடர்ந்து விவாதம் இடம்பெறும். 

இதனைத் தடுக்க எதிரணிகள் வீதிகளுக்கு வந்துள்ளன. நாடாளுமன்ற விவாதத்தை இவர்கள் பகிஸ்கரிக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கிடைக்கும் வாக்குகளில் அதிகப்படியானவைகளின் முடிவே தீர்மானம் என்பதால், எதிர்க்கட்சிகளின் பகிஸ்கரிப்பு அரசுக்கு சாதகமாக அமையலாம். 

நெருக்கடியான அரசியல் நகர்வுகள் ஒருபுறத்தே இவ்வாறு இடம்பெற, இவற்றுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இலங்கைக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் சமாசாரம் பிரபல்யம் பெற்றுள்ளது. இலங்கை என்ற குட்டித்தீவு சிலோன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட காலத்தில் தேயிலை ஏற்றுமதியால் புகழ்பெற்றது மட்டுமன்றி பொருளாதார பலமும் கண்டிருந்தது. சிறிலங்கா என்று பெயர் மாறிய பின்னர் ஈழத்தமிழர் அகதிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டது முதலிடம் பெற்றது. இப்போது குரங்குகளை ஏற்றுமதி செய்வதால் இலங்கை சர்வதேச புகழ் பெறப்போகிறது. 

முதற்கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப ஏற்பாடாகிறது. சீன அரசின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த ஏற்பாடு என்ற தகவலை சீனத் தூதரகம் மறுத்துள்ளது. சீனாவிலுள்ள நிறுவனம் ஒன்றின் வேண்டுகோளுக்கிணங்கவே குரங்குகள் அனுப்பப்படவுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. 

இவ்வாறு அனுப்பப்படும் குரங்குகளின் முதற்தொகுதி அங்குள்ள பரிசோதனைக்கூடமொன்றுக்கு என்று ஒரு தகவல் வர, இறைச்சிக்காகவே சீன நிறுவனம் கேட்பதாக மற்றொரு தகவல் வந்தது. சீனாவிலுள்ள தனியார் மிருகக்காட்சிச்சாலை ஒன்றுக்கு இவற்றை அனுப்பப் போவதாக இன்னொரு தகவல் வந்தது. 

இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான தகவல் வந்து கொண்டிருக்க, அமைச்சரவை நியமித்த குழு பரிந்துரைத்தால் மட்டுமே குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படுமென பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் கூறினார். அதேசமயம் வேறு இரண்டு அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான விவசாயக் காணிகளை குரங்குகள் அழித்து பயிர்ச் செய்கைகளை நாசம் செய்வதால் ஒரு தொகுதி குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டியிருப்பதாக விவசாய அமைச்சர் கூற, குரங்குகள் தேங்காய்களை அழிப்பதாகவும் - 2022ல் மட்டும் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்ததாகவும் சம்பந்தப்பட்ட ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

ஒரு குரங்கை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதால் 25,000 ரூபா வரை நாட்டுக்குக் கிடைக்குமென புள்ளிவிபரம் ஒன்றை இன்னொரு அமைச்சர் வெளியிட்டார். இவ்வாறு அரச தரப்பிலிருந்து ஒவ்வொருவரும் தம்மி~;டப்படி வியாக்கியானம் செய்வதனூடாக குரங்குகள் ஏற்றுமதி நிச்சயம் என்பது தெரிய வருகிறது. 

குரங்குகள் ஏற்றுமதி திட்டமிட்டவாறு நடக்குமானால் அனுராதபுரம் வழியாக தெற்கே பயணம் செய்பவர்கள் இன்றுபோல் மரக்கொப்புகளால் தாவித்திரியும் குரங்குகளை காண முடியாது போகலாம். உலக மகா கடன்காரனாகத் திகழும் இலங்கைக்கு குரங்குகள் ஒரு வரப்பிரசாதமாகியுள்ளன. 

இதனைக் குறிப்பிடும்போது 1960களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் தெரு நாய்களை (கட்டாக்காலிகள்) பிடிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சி ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நாட்களில் வீடுகளின் வளர்ப்பு நாய்களைவிட தெருநாய்களே யாழ்ப்பாணத்தில் அதிகம். விசர் நாய்களும்கூட வீதிகளிலேயே திரியும். இதனால் பலர் நாய்க்கடிக்கு உள்ளாகினர். இரவு வேளைகளில் இந்த நாய்கள் வீதிகளில் படுத்திருக்கும். இதனால் ஏற்படும் விபத்துகள் அதிகம். 

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண நாய்பிடிகாரர்களை யாழ்ப்பாணம் மாநகரசபை நியமித்தது. இவர்களுக்கு வண்டில்கூடு வழங்கப்பட்டது. பிடிக்கும் நாய்களை கூண்டுக்குள் ஏற்றி குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு சென்று அழிக்க வேண்டும். 

அழிக்கப்பட்ட நாய்களின் வால் நுனிப்பகுதியை வெட்டியெடுத்து நகர நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் ஒரு வாலுக்கு இத்தனை ரூபா என்று சன்மானமாக சம்பளம் வழங்கப்படும். சில நாய்பிடிகாரர் நாளொன்றுக்கு 30,40 வரையான நாய் வால்களை ஒப்படைத்து பெரும் பணம் பெற்றனர். 

வாரங்கள் பலவாகியும் வீதிகளில் நாய்கள் தொகை குறையவில்லை. நகர நிர்வாகம் மேலதிக ஊழியர்களை நியமித்து நிலைமையைக் கண்காணித்தது. பல நூற்றுக்கணக்கான நாய்கள் வாலின் நுனிப்பகுதி இல்லாமல் தெருக்களில் காணப்பட்டன. நாய்களைப் பிடிக்காமல் அதன் வாலின் நுனிப்பகுதியை ஒருவாறு வெட்டியெடுத்து பணம் பெற்றவரின் சாதுரியம் பின்னரே தெரிய வந்தது. 

இ;ப்படியான ஒரு நிலைமை தென்னிலங்கைக் குரங்குகளுக்கு வராமல் இருக்குமா? அல்லது ஊழல் அரசாங்கமே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுமா? 

No comments