சிங்கள தேசத்திற்கும் வலிக்கிறதாம்!

 


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கோரிவந்திருந்த நிலையில் தற்போது சிங்கள தேசத்திலிருந்தும் பலத்த குரல் எழுப்பப்பட்டுவருகின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு  பல வருடங்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. சட்டத்தில் மறுசீரமைப்பை கொண்டுவருமாறு யாரும் கூறவில்லை என்று மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பினர் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் புதிதாக ஏதேனும் ஏற்பாடுகளை உள்வாங்கி அல்லது புதுப்பித்து தருமாறு யாரும் கோரவில்லை. 

ஜனநாயக பண்புகளை கொண்ட இந்த நாட்டுக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்ற சட்டங்கள் பொறுத்தமற்றவை என்றே சகல தரப்பினரும் கூறிவருகின்றனர். அதனால் இந்த சட்டத்தை நீக்குமாறு கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் எவ்விதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி கைதுசெய்யப்பட்டு நூறுக்கும் அதிகமான நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கெடுபிடிகள் எவ்வாறானது என்பதற்கு அது சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றது.

அவர்களை தடுத்து வைப்பதற்காக சில அதிகாரிகள் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என்று நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது அத்தகைய பயங்கமரான சட்டமாகவே காணப்படுகின்றது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது அரசாங்கமானது தங்களுக்கு எதிரானவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்து துன்புறுத்தக்கூடிய சட்டமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் காணப்படுகின்றது.

அது மட்டுமல்லாது இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 14 வருடங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.


No comments