கூட்டமைப்பல்ல புதிதாக கட்டமைப்பாம்?



இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழரின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று, வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் மற்றும், பௌத்த மயமாக்கல் போன்ற செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது, தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், வனவளத் திணைக்களத்தால் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக இனங்காண்பதற்காக 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைகழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜக்கிய தேசிய கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் போன்ற அரசியல் கட்சியினரும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கையாலாகாத நிலையில் பொது கட்டமைப்பினை பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலே பல கசப்புணர்வுகள் இருந்தன. அவை பற்றிப்பேசி இனத்தை முன்கொண்டுசெல்ல முடியாது. ஆகவே நாங்கள் அனைவருமே ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது. தேர்தல் நோக்கத்திலே நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் ஒற்றுமையாக செயற்படுவது மிகக் கடினம். தேர்தலை ஒருபுறத்திலே வைத்துவிட்டு தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை அடக்கிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக அனைவரும் ஒன்றாக நிற்போமானால் எங்களுடைய செய்தியை பலமாகச் சொல்லமுடியுமெனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


No comments